“அடடா… வேலியே பயிரை மேய்ந்த கதையால்ல இருக்கு.?” சாவி கைவசம் இருப்பதால் தனி ரூட்டில் “சரக்கு” சேல்ஸ்!! அம்பலமான “டாஸ்மாக்” ஊழியர்களின் “தில்லாலங்கடி!!”

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளத்தனமாக சரக்குகள் தாராளமாக புழங்கி வருவதற்கு டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களே உடந்தை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு டாஸ்மாக் ஊழியர்கள் பலர் கைதாகியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டும் வருகிறது.

 

நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் தமிழகத்தில் 144 தடை உத்தரவால் கடந்த மார்ச் 24-ந் தேதி மாலை 6 மணிக்கு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன. இதனால் குடிமகன்கள் பாடு திண்டாட்டமாகி சரக்கு கிடைக்காதா? என அலைபாய்ந்தனர். இப்படி குடிமகன்கள் அலை பாய்வதை சாதகமாக்கி, திருட்டுத்தனமாக இரு மடங்கு விலையில் சரக்குகள் தாராளமாக கிடைத்து வருவதும் தமிழகம் முழுக்கவே நடைபெற்று வந்தது.

டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலான நிலையில், வெளியில் திருட்டுத்தனமாக சரக்குகள் கிடைப்பது எப்படி? என்ற சந்தேகமும், கேள்வியும் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் எழுந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பவர்களை குறிவைத்தது போலீஸ் .அதிரடி வேட்டை நடத்தியதில் பெட்டியாக, பெட்டியாக டாஸ்மாக் சரக்குகள் பிடிபட்டன. மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திண்டுக்கல் என தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இப்படி ரெய்டு நடந்தது. ஏகப்பட்ட பேர் போலீசிடம் சிக்கினர்.

 

இப்படி போலீசிடம் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் சூபர்வைசர், சேல்ஸ்மேன்கள் என்பது தான் பகீர் ரகமாகி விட்டது. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு விட்டாலும், கடைகளின் சாவி இவர்களின் வசமே இருந்தது சாதகமாகப் போய்விட்டது. சரக்கு கிடைக்காமல் ஏங்கி, முகம் வீங்கிப் போன குடிமகன்களோ என்ன கூடுதல் விலையானாலும் வாங்கத் தயாராக இருந்தனர். ஏற்கனவே கடைகளில் பாட்டிலுக்கு மேல் ரூ.5 என பகிரங்கமாகவே கல்லா கட்டி ருசி கண்ட காசுக்கு ஆசைப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள், இப்போது இரு மடங்கு, 3 மடங்கு கூடுதல் காசு கிடைக்கும் என்றால் சும்மா விடுவார்களா? துணிச்சலாக தனி ரூட்டில் சரக்கு சேல்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ராத்திரி நேரத்தில் கடைக்குச் சென்று, பெட்டியாக ,பெட்டியாக சரக்குகளை லபக் செய்து வந்து கூட்டாளிகள் மூலமும், பார் நடத்துபவர்கள் மூலமும் ஜோராக விற்பனையை அரங்கேற்றி வந்துள்ளனர். ரூ.110 விலையுள்ள அடிமட்ட சரக்கையே ரூ.300 , 350 என விற்பனை செய்து ஏக கொள்ளை லாபம் பார்த்ததும் அம்பலமாகியுள்ளது. சில அதி துணிச்சல்கார ஊழியர்களோ, இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கடையை திறந்தே கூட வியாபாரம் பார்த்துள்ளதும் தெரிய வந்துள்ளது.இதில் டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் பங்கு இருந்ததாகவும் கூட கூறப்படுகிறது.

 

தமிழகம் முழுவதும் 2 நாட்களாக போலீஸ் நடத்திய ரெய்டில் பெட்டி, பெட்டியாக ஆயிரக்கணக்கில் மது பாட்டில்களும், டாஸ்மாக் சூபர்வைசர்கள், சேல்ஸ்மேன்கள் என பலரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் இப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 210 கடைகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 74 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சாவிகளை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவுகள் பறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பாகிக் கிடக்கிறது டாஸ்மாக் விவகாரம்.


Leave a Reply