பணி நிரந்தரம் கோரி போராட வந்த மருத்துவ பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, குளித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்து வந்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மேம்பாட்டு சங்கத்தினர் காவல் துறையினர் குண்டு கட்டாக கைது செய்தனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பல்நோக்கு மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக அளித்த தமிழக வெற்றிக்கழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி இன்று எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே போராட்டம் நடத்தப் போவதாக காவல்துறையினரிடம் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மேம்பாட்டு சங்கத்தினர் அனுமதி கேட்டு இருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததோடு மட்டுமல்லாமல், போராட்டம் நடத்துவதற்காக ஆயத்தமான சங்கத்தின் நிர்வாகிகளை நள்ளிரவிலேயே அவரது வீடுகளிலேயே போலீசார் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர். அதனையும் மீறி சென்னையில் போராட்டம் நடத்த வந்த ஏராளமான மருத்துவ பணியாளர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்தனர்.
மருத்துவ பணியாளர்களின் கைதுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லிக்கு போராட செல்லும் இளைஞர்களை ஆங்காங்கே கைது செய்யும் ஓனர்களின் பாணியில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னைக்கு வந்து போராடவிருந்த பன்னோக்கு மருத்துவப்பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைக்கும் இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலளார் டிடிவி தினகரன், பணி நிரந்தரம், தற்செயல் விடுப்பு, பணி மாறுதல் கலந்தாய்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பாக போராடவிருந்த பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு அனுமதி மறுத்து அவர்களை ஆங்காங்கே வீட்டுக் காவலில் அடைத்து வைத்ததோடு, அதனை மீறி போராட வந்தவர்களை குண்டுக்கட்டாக கைதுசெய்திருக்கும் காவல்துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





