ஊரடங்கு உத்தரவை மீறி பொது இடங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய மேட்டுப்பாளையம் காவல் துறையினர் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விறுவிறுவென உயரும் அதேவேளையில், பலி எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இருவர் உயிரிழந்த நிலையில், இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேலும் இருவர் பலியாகியுள்ளனர்.

 

உலக நாடுகளை பெரும் பீதியிலும், அச்சத்திலும் உறையச் செய்துள்ள கொரோனா வைரசின் கோரத் தாண்டவம் இந்தியாவிலும் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கி விட்டது. கடந்த ஒரு வாரத்தில் வைரஸ் பரவல் விறுவிறுவென அதிகரித்து இன்று பாதிப்பு எண்ணிக்கை 3600ஐ கடந்துள்ளது. பலி எண்ணிக்கையும் செஞ்சுரி அடித்துள்ளது.

 

தமிழகத்திலும் நான்கே நாட்களில் தினமும் அதிகரித்து பாதிப்பு எண்ணிக்கை 485 ஆகியுள்ளது. ஏற்கனவே மதுரையைச் சேர்ந்த நபர் உயிரிழந்த நிலையில், நேற்று தேனியில் ஒரு பெண், விழுப்புரத்தில் ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் என 2 பேர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் இன்று உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவாமலிருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களின் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் வாங்க குறிப்பிட்ட நேரத்தில் கடைகளை திறந்து விற்பனைக்கு பின் மூட அரசு அறிவித்துள்ளது. கடைகளில் கூட்டம் சேராமல் சமூக இடைவெளி அவசியம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

 

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழழை என்பதால் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இறைச்சி,காய்கறிகள் மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர். மார்க்கெட்டிற்குள் நுழைந்த மக்களோ எவ்வித சமூக இடைவெளியை பின்பற்றாமல் அரசு பல முறை அறிவுறுத்தியும் பொதுமக்களிடம் கொரானா வைரஸ் பரவுமே என்ற பயம் துளியும் இல்லாது கும்பல், கும்பலாக கூடினர்.

 

இதனை கண்ட மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முரளி இருவரும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஊரடங்கு உத்தரவினை மீறிய பொது மக்களை பேருந்து நிலையத்தின் முன்புறமாக போதுமான சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்து கொரோனா வைரசினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும்,அவ்வைரசின் பரவலை தடுக்க செய்ய வேண்டியவை குறித்தும் அறிவுரை வழங்கினர்.

மேலும்,பொது மக்களின் நலனுக்காகவே அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதாகவும்,அந்த உத்தரவினை முறையாக பின்பற்றினாலே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.மேலும்,அத்தியாவசிய பொருட்களை வாங்குவோர் ஒருவர் மட்டுமே கடைகளுக்கு சென்று பொருட்களை பெற்றுச்செல்ல அறிவுறுத்தினர்.

 

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பொதுமக்கள் போதுமான சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க வைக்கப்பட்டிருந்தனர் என்பதே.

 

ஊரடங்கு உத்தரவினை மீறி பொது இடங்களில் சுற்றித்திரிபவர்களை லத்தியால் ” கவனிக்காமல் ” தங்களது கனிவான பேச்சால் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முரளி உள்ளிட்டோரின் இச்செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.


Leave a Reply