ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைப்பதால் டிவி, பிரிட்ஜ் வெடிக்குமா? தமிழக மின்வாரியம் விளக்கம்..! ராணுவமும் வேறு ஒரு அறிவுரை!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


கொரோனாவுக்காக இன்று இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் மின் விளக்கை அணைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்நிலையில் ஒட்டுமொத்தமாக மின் விநியோகத்தை தடை செய்து மீண்டும் ஒரே நேரத்தில் மின்சாரம் வரும் போது மின் சாதனங்கள் வெடிக்கும் அபாயம் உள்ளதாக பீதி கிளம்பியுள்ள நிலையில், தமிழக மின்சார வாரியம் தரப்பில், இன்று இரவு 9 மணிக்கு என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக் கூடாது என சில விளக்கங்களை அளித்துள்ளது.

 

கொரோனாவுக்கு எதிரான போரில் நமது ஒற்றுமையை உணர்த்த, நாடு முழுவதும் இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை அணைத்து, அகல் விளக்கு, மெருகுவர்த்தி, டார்ச் லைட், மொபைல் டார்ச் மூலம் வெளிச்சம் பாய்ச்சி பிரகாசிக்க செய்யுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் நாட்டு மக்கள் பெரும்பாலானோர் இன்று இரவு 9 மணிக்கு மோடியின் அழைப்பை நிறைவேற்ற தயாராகி வருகின்றனர்,

இந்நிலையில், ஒட்டு மொத்தமாக மின்சார பயன்பாட்டை நிறுத்திவிட்டு மீண்டும் ஒரே நேரத்தில் மின்சாரத்தை பயன்படுத்தும் போது மின் வழித்தடத்தில் பெரும் பிரச்னைகள் எழும் என மகாராஷ்டிர மின்துறை அமைச்சர் ராவத் பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதேபோல் ஒட்டுமொத்தமாக மின்சாரத்தை ஆப் செய்து மீண்டும் ஆன் செய்தால், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள் வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் சிலர் பீதியைக் கிளப்பி விட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், இன்று இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்கும் போது என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக மின்வாரியம் அறிவுரைகளையும், விளக்கங்களையும் தெரிவித்துள்ளது. அதில், இரவு 9 மணிக்கு மெயின் சுவிட்ச்ஐ யாரும் ஆஃப் செய்ய வேண்டாம். விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும். தெருவிளக்குகள், மருத்துவமனைகள், பொது இடங்கள் போன்ற அத்தியாவசியமான இடங்களில் விளக்குகளை அணைக்க வேண்டாம்.

வீடுகளில் விளக்குகளை அணைக்கும் போது, பிரிட்ஜ், டிவி,பேன் போன்ற மின் சாதனங்களை ஓடவிடுவதும் நல்லது. திடீரென மின் சப்ளையை கட் செய்து மீண்டும் ஒரே நேரத்தில் மின் விநியோகம் செய்வதால் மின் சாதனங்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. அதே போல் மின் வழித்தடத்திலும் கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் நமது மின் கட்டமைப்பு வலுவானதாகவும், நிலையானதாகவும் உள்ளது என மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.

 

இன்றிரவு 9 மணிக்கு அகல் விளக்கு, தீபம், மெழுகுவர்த்தி ஏற்றும் போது வேறு ஒரு அபாயம் உள்ளதையும் நமது ராணுவம் சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பலரும் அடிக்கடி சானிடைசரை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்கின்றனர். இந்த சானிடைசரில் ஆல்கஹால் அளவு அதிகம் உள்ளதால் எளிதில் தீப்பற்றும் வாய்ப்பு அதிகம். எனவே அடிக்கடி கைகளை சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்தியவர்கள், விளக்குகளை ஏற்றும் முன் கைகளை சோப்பு போட்டு தண்ணீரில் கை கழுவுவது அவசியம் என்ற அறிவுரையை கூறி இந்திய ராணுவம் நாட்டு மக்களை உஷார்படுத்தியுள்ளது.


Leave a Reply