“வேலியே பயிரை மேய்ந்த கதையானது” ராமேஸ்வரம் கோயில் மூலவரை படம் பிடித்த குருக்கள் சஸ்பென்ட்!! குற்றம் குற்றமே செய்தியால் ‘விறுவிறு’ நடவடிக்கை!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மூலவர் சிலையை படம் பிடித்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டது அந்தக் கோயிலின் குருக்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஆகம விதிகளுக்கு புறம்பான இந்த செயலை செய்த கோயில் குருக்கள் விஜயகுமார் போகியை கோயில் நிர்வாகம் சஸ்பென்ட் செய்துள்ளது. நமது குற்றம் குற்றமே இதழின் செய்தி எதிரொலியாக கோயில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வடக்கே காசி விஸ்வநாதர் ஆலயத்தை எந்தளவுக்கு இந்துக்கள் புண்ணிய ஸ்தலமாக கருதுகிறார்களோ, அதற்கு இணையாக தெற்கில் புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் கோயில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலாகும். கோயிலின் கருவறையில், மூலவராக ராமநாத சுவாமியின் பெயரால் சிவலிங்கம் உள்ளது.

 

ராமாயண காலத்தில், மணலால் சீதை உருவாக்கிய இந்த சிவலிங்கத்தை, ராமன் வணங்கி வந்ததாக கூறப்படுவதுண்டு. இந்த சிவலிங்கம் தான் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் கருவறையில் அமைந்துள்ளது.

 

இலங்கை மன்னன் பராக்கிரம பாகுவினால் பல நூற்றாண்டுகளுக்கு முன் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் கருவறை அமைக்கப்பட்டு, ராமன் வணங்கிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுவதுண்டு. இந்த கருவறைக்குள் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் தீட்சை பெற்ற குருக்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும்.

மேலும் கருவறைக்குள் நுழைய நேபாள மன்னர் மற்றும் சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆகிய 2 பேருக்கு மட்டுமே அனுமதி . வேறு யாரும் நுழைய வே கூடாது என்பதுடன் இந்த கருவறைக்குள் உள்ள மூலவர் சிவலிங்கத்தை படம் எடுக்கக் கூடாது என ஆகம விதிகள் உள்ளன.

 

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைர லாகி, பக்தர்கள் பலரை பதறச் செய்தது. ஆகம விதிகளை மீறி புகைப்படம் எடுத்தது யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

 

வெளியாட்கள் யாரும் நுழைய முடியாத கருவறைக்குள் படம் பிடித்தது யார்?. பூஜை செய்யும் குருக்களில் யாரேனும் அல்லது பணியாளர்களில் எவரேனும் பணத்திற்கு ஆசைப்பட்டு படம் பிடித்தார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆகம விதிகளுக்கு எதிரான இச்செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை எழுப்பியதுடன் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

 

இது தொடர்பாக நமது குற்றம் குற்றமே இதழும் கடந்த 6-ந் தேதி விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கோயில் இணை ஆணையர் கல்யாணி நேற்று தீவிர விசாரணை நடத்தினார். மூலவர் வீற்றிருக்கும் கருவறைக்குள் செல்ல அனுமதி பெற்றுள்ள குருக்கள்கள் மற்றும் கோயில் பணியாளர்களிடம் அவர் தீவிர விசாரணை நடத்தினார்.

 

இதில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக கருவறைக்குள் பூஜை செய்யும் விஜயகுமார் போகி என்ற குருக்கள் தான் என்பது அம்பலமானது. தனது அலைபேசியில் படம் பிடித்து வாட்ஸ்அப் மூலம் அவர் சிலருக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் குருக்கள் விஜயகுமார் போகியை உடனடியாக சஸ்பென்ட் செய்து கோயில் ஆணையர் கல்யாணி உத்தரவிட்டார்.


Leave a Reply