வினாத் தாள் கசிவு சர்ச்சை..!
நீட்-யுஜி உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA), அடுத்த ஆண்டு முதல் கணினி வழியில் தேர்வுகளை நடத்துவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் அரசு கல்வி நிறுவனங்களில் உள்ள கணினி வசதிகள் மற்றும் காலியாக உள்ள இடங்கள் குறித்த தகவல்களை சேகரிக்குமாறு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடம் (AICTE) கேட்டுள்ளது.
இதையடுத்து, மாநில அரசுகளின் கீழ் செயல்படும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், ஏ.ஐ.சி.டி.இ-யால் அங்கீகரிக்கப்பட்ட அரசு உயர்கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் முதல்வர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. இந்த வார தொடக்கத்தில் கடிதம் அனுப்பியுள்ளது. நீட்-யுஜி தேர்வு தற்போது பேனா-காகித முறையில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அடுத்த ஆண்டு முதல் இந்தத் தேர்வை கணினி வழி தேர்வாக (CBT) மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த மாற்றத்துக்கு ஏற்ப நாடு முழுவதும் போதுமான தேர்வு மையங்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மாணவர்கள் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலையைத் தவிர்க்க, பல்வேறு பகுதிகளில் தேர்வு மையங்களைக் கொண்ட விரிவான வலையமைப்பை உருவாக்க என்டிஏ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்காக ஏ.ஐ.சி.டி.இ. சார்பில் குறிப்பிட்ட படிவமும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வழங்கப்படும் தகவல்கள் முழுமையாகவும், சரியாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரியால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ.-யால் அங்கீகரிக்கப்பட்ட அரசு கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தத் தகவல் கோரிக்கை பொருந்தும்.
அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள், பாலிடெக்னிக் நிறுவனங்கள், அரசு பல்கலைக்கழகத் துறைகள், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களிடம் உள்ள வசதிகள் குறித்த விவரங்களை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஏ.ஐ.சி.டி.இ.-க்கு சமர்ப்பிக்க வேண்டும். என்டிஏ, கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஏ.ஐ.சி.டி.இ.-க்கு இதுதொடர்பாக கடிதம் அனுப்பியதாக அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, என்டிஏ-வில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட்-யுஜி தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட சர்ச்சைகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மே 3-ம் தேதி நடைபெற்ற முதல் நீட்-யுஜி தேர்வில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து அந்தத் தேர்வை ரத்து செய்யும் நிலைக்கு மத்திய கல்வி அமைச்சகம் சென்றது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் போராட்டங்களுக்கு வழிவகுத்ததுடன், அப்போது கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானின் பதவி விலகலுக்கும் அழுத்தம் ஏற்பட்டது. இந்தப் பின்னணியில், நீட் உள்ளிட்ட முக்கிய நுழைவுத் தேர்வுகளை நடத்தும் முறையில் மாற்றங்களை கொண்டு வரவும், தேர்வு மையங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் என்டிஏ நடவடிக்கை எடுத்து வருகிறது. கணினி வழித் தேர்வு முறைக்கு நீட் மாறும் நிலையில், நாடு முழுவதும் போதுமான கணினி வசதியுடன் கூடிய தேர்வு மையங்களை உருவாக்குவது என்டிஏ-வின் முக்கிய சவாலாக இருக்கும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





