2 ஆண்டுகளில் திருமண முறிவை அறிவித்த பிரதீப் ஆண்டனி
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர் பிரதீப் ஆண்டனி. சில படங்களில் நடித்திருந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சில நாட்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும் மக்கள் மனங்களில் இடம்பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது காதலியான பூஜா என்பவரை கடந்த 2024ஆம் ஆண்டு கரம்பிடித்தார். இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தையும் பிறந்தது. தனது குழந்தையின் புகைப்படங்களை வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதீப் ஆண்டனி இப்போது மனைவியை பிரிய உள்ளதாக குண்டை போட்டுள்ளார்.
பிரதீப் ஆண்டனி அண்மையில் வெளியிட்ட பதிவில், “நான் நண்பர்களிடம் அடிக்கடி “இந்தக் குழந்தையை விற்றுவிடலாம்” என்று நகைச்சுவையாகச் சொல்வேன். ஒரு குழந்தையைப் பொறுப்புடன் வளர்க்கும் அளவுக்கு நான் சரியான மனிதர் இல்லை என்றும் நினைத்தேன். அதனால், பூஜா கர்ப்பமாக இருந்தபோது, “இந்தக் குழந்தையை வாங்க முன்பதிவு செய்து சில லட்சம் ரூபாய் கொடுங்கள்” என்று காமெடியாக கூறியிருக்கிறேன். ஆனால் குழந்தை பிறந்த பிறகு என் மனநிலை மாறிவிட்டது. அது என்னைப் பார்த்து மகிழ்ச்சியாக இருப்பது, நான் சொல்வதை கேட்பது எனக்கு ஒரு புதிய மகிழ்ச்சியைத் தந்தது.
என் கைகளில் இருந்த அந்தச் சிறிய உயிர் சந்தோஷமாக இருந்ததால், ஒவ்வொரு நாளும் எனக்கு புதிதாகத் தோன்றியது. ஆனால் இப்போது அது என்னுடன் இல்லை. அந்தக் குழந்தையுடன் நான் மகிழ்ச்சியாக இருந்த கடைசி தருணம் இதுதான். ஒரு மாதத்திற்கு முன்பே நான் அந்த குழந்தையின் மீதான நம்பிக்கையை விட்டுவிட்டேன். என் மனம் உள்ளுக்குள் வதைக்கிறது. ஏனென்றால், எனக்கு எப்போதும் ஒரு நல்ல குடும்பம் வேண்டும், நல்ல அப்பாவாக இருக்க வேண்டும், நான் வளர்ந்த சூழலுக்கு முற்றிலும் மாறான ஒரு சூழலை என் குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆனால் அதில் நான் தோல்வியடைந்துவிட்டேன். நாம் அதிகம் பயப்படும் விஷயங்களே நம்மைத் தேடி வரும் என்பதை நான் உணர்ந்தேன். நான் ஒரு தவறு செய்துவிட்டேன். தவறான நபரை திருமணம் செய்துகொண்டேன் என்று நினைக்கிறேன். அந்தத் திருமணம் என்னை நாளுக்கு நாள் மோசமான மனிதராக மாற்றியது. என் உலகத்தில் இல்லாத, என்னை புரிந்து கொள்ளவோ முயற்சி செய்யாத ஒருத்தரின் பக்கத்தில் தான் தினமும் காலையில் எழுந்திருக்கிறேன். அவள் இன்னமும் தன் சொந்த குடும்பத்துடனும் தன் வாழ்க்கையோடுமே தேங்கிப்போய் இருக்கிறாள்.
நான் தினமும் ஒருவரின் வாழ்க்கையை அழித்துக்கொண்டிருப்பதைப் போல இன்னொருவருடன் இணைந்து எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. இரண்டு முற்றிலும் வேறுபட்ட மனிதர்கள் தினமும் மோதிக்கொண்டு, ஒருவரை ஒருவர் வெறுப்பது போலவே இருந்தது. அது எங்களிருவருக்கும் நியாயமற்றதாகத் தோன்றியது. என்னுடைய முந்தைய காதல் உறவால் நான் மனதளவில் பலவீனமாக இருந்தேன். அந்த பலவீனமான நேரத்தில் கிடைத்த அன்பை பிடித்துக் கொண்டேன். அதற்கு நான் இன்றுவரை உண்மையாக இருந்தேன். ஆனால் அதற்காக நான் பெரிய விலையைச் செலுத்த வேண்டியதாகிவிட்டது.
அன்புக்கான ஏக்கமும், என் பலவீனமும் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டன. இதனால் இந்த திருமண வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்ல முடிவு செய்துவிட்டேன். ஏனென்றால் இந்த உறவில் என்னால் மூச்சுக்கூட விட முடியவில்லை. அவளுக்கும் இப்போது என் மீது அன்பு இல்லை என்றே நினைக்கிறேன். எது எப்படியோ, இன்று நான் அந்த குழந்தையை மிகவும் நினைத்துப் பார்த்தேன். அதற்கு ஒரு பெயர் கூட என்னால் வைக்க முடியவில்லையே. என் மனதிற்குள் குழந்தை எப்போதும் ‘அது’ ஆக மட்டுமே இருந்தது. இனி பொதுவெளியில் என் உணர்வுகளைப் பற்றி இவ்வளவு ஓப்பனாகப் பேசுவதைப் பார்த்து எனக்குத் தொடர்ந்து போன் கால்கள் வரும்.
நான் பேசுவதைத் தடுத்து என் வாயை மூடச் சொல்வதற்காகவே ஆட்களிடமிருந்து அழைப்புகள் வரும். ஆனால் மனவிட்டுப் பேச எனக்கு உண்மையிலேயே யாருமே இல்லை. சண்டை போட்டுக்கொண்டு ஒருவரையொருவர் வெறுக்கும் பெற்றோர் மத்தியில் அது வளர்வதை விட, அந்த குழந்தை தன் அம்மாவிடம் இருப்பதே நல்லது என்று நினைத்தேன். எப்போதுமே ஒரு அநாதையாகவே வாழ வேண்டும் என்ற என் விதியை நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன்.” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் 2 ஆண்டுகளில் பிரதீப் ஆண்டனியின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கிறது வெளிப்படையாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




