பழங்குடியின மாணவிகளை அரசுப் பேருந்தில் ஏற்ற மறுப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரத்தில் அரசு நகரப் பேருந்தில் பள்ளிக்குச் சென்ற 11 பழங்குடியின மாணவிகள் கீழே தள்ளப்பட்டதில் 8 மாணவிகளுக்கு கடும் காயம் ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் திருச்சி புதுக்கோட்டை சாலையில் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கீரனூரில் இருந்து புதுக்கோட்டை சென்ற அரசு பேருந்து நடத்துநர் மாணவிகளை இறங்குமாறு வற்புறுத்திய நிலையில், ஓட்டுநர் பேருந்தின் கதவுகளை திறந்து நடத்துனர் பழங்குடியின மாணவிகளை கீழே தள்ளியதில் இதில் 8 மாணவிகள் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டையில் இருக்கும் பள்ளிக்குச் செல்வதற்காக ரெங்கம்மாள் சத்திரத்தில் மாணவிகள் அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி அவர்களை இறங்குமாறு நடத்துநர் வற்புறுத்தியதாக தெரிகிறது. மாணவிகள் மறுத்த நிலையில், மெதுவாகச் சென்ற பேருந்தின் கதவைத் திறந்து ஒரு மாணவியை நடத்துநர் பலவந்தமாக தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் படிக்கட்டு அருகே நின்றிருந்த மற்ற மாணவிகளும் அடுத்தடுத்து கீழே விழுந்தனர். இதில் 8 பேருக்கு தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. மாணவிகள் பேருந்தில் இருந்து கீழே தள்ளப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்த மாணவிகள் வலியால் கதறியதை பார்த்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர். பின்னர் மாணவிகள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் கீழே விழுந்த நேரத்தில் பின்னால் மற்றொரு வாகனம் வந்து கொண்டிருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மாணவிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கண்டித்து, சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை-திருச்சி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவிகள் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நடத்துநர் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இது குறித்துப் புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, “இச்சம்பவம் குறித்துத் தகவல் வந்துள்ளது. உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடத்துநர் அல்லது ஓட்டுநர் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் அரசுப் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாகக் கூறி படியில் ஏறிய பழங்குடியின மாணவிகளை கீழே தள்ளிவிட்டதாக புகார் எழுந்து போராட்டம் நடந்த நிலையில், ஏற்ற மறுத்த ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரங்கம்மாள் சத்திரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போதுதான் முதல் தலைமுறையாக அரசுப் பள்ளிகளிலும் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரிகளிலும் கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்த நிலையில், கீரனூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் செல்லும் தடம் எண் 8 நகரப் பேருந்தில், காலை நேரங்களில் பயணிகள் மற்றும் மாணவர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அந்த வழித்தடத்தில் நகரப் பேருந்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இயங்குவதே இந்த பிரச்சனைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




