கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள மன்னீஸ்வரர் சிவாலயம் ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கும் இக்கோவிலின் சிவலிங்கத்தின் இருபுறமும் இறக்கைகள் இருப்பது விஷேசமானது. இக்கோவிலில் கடந்த 2000 ஆண்டு முதல் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான தேர் திருவிழா கடந்த 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினசரி மாலையில் சாமி திருவீதி உலா மற்றும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணி அளவில் துவங்கியது.
இதில் கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.அப்போது,கோவிந்தா,கோவிந்தா கோஷம் விண்ணை பிறந்தது. விழாவின் சிறப்பம்சமாக குதிரை ஆட்டம் ஜமாப் இசைக்கேற்ப நடனமாடியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இந்நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் உள்ளிட்ட பல துறவிகள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.