கோவை பூ மார்க்கெட் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கியதாக தெரிவித்தார்.
இத்திட்டத்தை நீதிமன்றத்திற்கு சென்று தடுக்க முயன்றதாகவும், அதனை முறியடித்து இரண்டாவது ஆண்டாக செயல்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எளிமையான கிராமத்தில் இருந்து வந்த முதலமைச்சரை, யார் வேண்டுமானாலும் எளிதாக சந்திக்க முடியுமென அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் 2 கோடியே 85 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க 111 கோடியே 35 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.விழாவில் எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன்,மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.