ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு..?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது ஸ்ரீபெரும்புதூரில் கடந்த1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கை சிபிஐ விசாரித்தது. இந்த படுகொலை சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் காரணம் என்று சிபிஐ விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. தூக்குத்தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

 

இவர்கள் ஏழு பேரும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால், விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலும் இருந்து எழுந்தது. நளினி உள்ளிட்டோரும் உச்ச நீதிமன்றம் வரை சென்று கோரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கோரிக்கை விடுத்தன்.இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டில் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இவர்களை விடுதலை செய்வதில் மத்திய அரசு மவுனம் சாதித்து வந்தது.

இந்நிலையில் இவர்கள் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என கடந்தாண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம், தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தீர்மானம் அனுப்பப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலான நிலையில், ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் வழங்குவது எந்த முடிவும் எடுக்கவில்லை.

 

இந்நிலையில் தான், 7 பேரின் விடுதலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் வழங்க முடியாது என தமது எதிர்ப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வாய்மொழியாக ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்து விட்டதாகவும், இது பற்றிய அதிகாரப்பூர்வ முடிவை அவர் விரைவில் வெளியிட உள்ளதாகவும் அந்த நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. 7 பேரின் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளியாகியுள்ள இந்த செய்தி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply