முரசொலி’ இடம் பஞ்சமி நிலமா? ராமதாஸை டுவிட்டரில் வறுத்தெடுத்த ஸ்டாலின்

முரசொலி நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்பதை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார். நிரூபிக்காவிட்டால் ராமதாசும் அவருடைய மகன் அன்புமணியும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

 

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள அசுரன் திரைப்படத்தைப் பார்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார். அசுரன் – படம் அல்ல பாடம் என்றும் பஞ்சமி நிலம் மீட்பு பற்றி தைரியமாக படம் எடுத்ததற்கும் டுவிட்டரில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலுக்கு தனுஷும் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பஞ்சமி நிலம் தொடர்பாக அசுரன் படத்தை மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்ததற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பா.ம.க.நிறுவனர் கிண்டலடித்து டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். ஆஹா… அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று மி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம் என்று ராமதாஸ் பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் டாக்டர் ராமதாசுக்கு சவால் விடுத்து மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.!

 

அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட
பட்டா- மனை!

 

நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!

அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று சவால் விடுத்துள்ள மு.க.ஸ்டாலின், முரசொலி இடம் தொடர்பான ஆவணத்தையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு டாக்டர் . ராமதாஸ் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதே தற்போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply