தமிழக பாஜகவின் புதிய தலைவராக கோவையைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த முறை துடிப்பான இளைஞர் ஒருவரையே தலைவராக நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்ததை அடுத்து, ஏ.பி.முருகானந்தத்துக்கு அந்த அதிர்ஷ்டம் அடிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் அவசர அழைப்பை அடுத்து ஏ.பி.முருகானந்தம் டெல்லி விரைந்துள்ளது தமிழக பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சவுந்திரராஜனின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் வரை இருந்தது. திடீரென அவருக்கு கடந்த மாதம் புரமோஷன் கொடுத்து தெலுங்கானா மாநில ஆளுநராக்கி விட்டது பாஜக மேலிடம் . இதனால் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பதுதான் தமிழக பாஜகவில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. மத்தியில் ஆளுங்கட்சியாக இருப்பதாலும், தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நடக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகளுக்கு மத்திய ஆளுங்கட்சி என்ற முறையில் பாஜக பெரும் பங்கு வகிப்பதாலும் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வந்தது. தலைவர் பதவி ரேசில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோவை சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா வானதி சீனிவாசன், நரேந்திரன், கருப்பு முருகானந்தம், அதிமுகவில் இருந்து வந்த நயினார் நாகேந்திரன் ஆகியோர் கடும் போட்டியில் இருந்தனர். இதனால் யாரை தலைவராக நியமிப்பது என்பதில் பாஜக மேலிடமும் பெரும் யோசனையில் ஆழ்ந்ததால், புதிய தலைவர் நியமனம் ஒரு மாதத்திற்கும் மேலாக தள்ளிப் போய் வந்தது.
இந்நிலையில் தான், தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் துடிப்பான இளைஞர் ஒருவரை அதுவும், புதுமுகம் ஒருவரை நியமிக்கும் முடிவுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வந்துள்ளதாக தெரிகிறது.தமிழக பாஜகவுக்கு இனி மூத்த தலைவர்கள் வேண்டாம். இரவு பகல் பார்க்காமல் ஓடி உழைக்கும் ஒருவரையே தலைவராக்க வேண்டும் என்று அமித் ஷா முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது. அந்த வகையில் கோவையைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தத்தை தலைவராக்க அமித் ஷா முடிவெடுத்துள்ளதாகவும், இதனால் அவருடைய அவசர அழைப்பின் பேரில் ஏ.பி.முருகானந்தம் டெல்லி விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் இந்த ஏ.பி.முருகானந்தம்?
கோவையைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் பொறியியல் மற்றும் சட்டத் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.1998-ல் பாஜக இளைஞரணியின் கோவை மண்டல தலைவராக முதன் முறையாக பொறுப்பேற்றவர்.
பின்னர் கோவை மாவட்ட பாஜக பொதுச்செயலாளர், மாநில பொதுச்செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினர், அகில இந்திய இளைஞரணி செயலாளர், தற்போது இளைஞரணி தேசிய துணைத் தலைவர், பாஜகவின் அகில இந்திய போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் என கடந்த 20 வருடங்களில் ஏ.பி.முருகானந்தத்தின் அரசியல் பயணம் விறு விறுப்படைந்தது.
இதில் கட்சியின் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராக இருந்து கேரளா,மே.வங்கம் கர்நாடகம் மஹராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஏ.பி.முருகானந்தம் திறம்பட பணியாற்றியவர். மே.வங்கத்தில் மம்தா அரசுக்கு எதிராக அமித் ஷா நடத்திய போராட்டம், கேரளாவில் பாஜக நடத்திய ஜனரட்சக யாத்திரை என்ற மக்கள் பாதுகாப்பு யாத்திரை உட்பட இந்தியா முழுவதும் பாஜக நடத்திய வலுவான போராட்டங்களில் களத்தில் ஓரிரு மாதங்கள் தங்கி போராட்டங்கள் வெற்றிபெற காரணமாக இருந்தவர் ஏ.பி. முருகானந்தம். மேலும் கட்சிக்குள் புதியவர்களை கொண்டு வந்து இளைஞரணிக்கு பலமான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்ததில் இவரது உழைப்பும் மிக முக்கியமானது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இம்மாநிலங்களில் பாஜக செல்வாக்கு பெற ஏ.பி.முருகானந்தமும் காரணமாக திகழ்ந்துள்ளார். இதனால் அமித் ஷாவிடமும், பிரதமர் மோடியிடமும் இவருக்கு நற்சான்றிதழ் கிடைத்தது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜக காலூன்ற, துடிப்பு மிக்க இளைஞரான ஏ.பி.முருகானந்தத்தை தலைவராக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எச்.ராஜா போன்ற தமிழக பாஜக மூத்த தலைவர்கள் சிலர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.இதனால் பாஜக செய்துள்ள பல்வேறு பணிகள், மத்திய அரசின் திட்டங்கள் தமிழகமக்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது என்றும் அமித் ஷா கருதுவதாக தெரிகிறது. எனவே ஏ.பி.முருகானந்தம் தலைவரானால், தமிழகத்தில் பாஜகவின் அடையாளம் மாறுவதுடன், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டு புதிய முகமாய் தாமரை மலரும் என்று அமித் ஷா நம்புவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தான் ஏ.பி.முருகானந்தத்திற்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டு அவர் டெல்லி விரைந்துள்ளார். அமித் ஷாவுடனான ஏ.பி.முருகானந்தத்தின் சந்திப்புக்குப் பின் தமிழக பாஜகவின் புதிய தலைவர் நியமனம் பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழக பாஜகவில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






