சென்னை மெரினா கடற்கரையை திறப்பதில் தாமதம் ஏன்..?
சென்னை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தில் நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை செய்து இருக்கிறது.
சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும், தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ரமேஷ் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மெரினாவை சுத்தப்படுத்துவதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் , லூப் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரை பொது மக்களுக்கு எப்போது திறக்கப்படும் என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு நவம்பர் இறுதி வரை மெரினாவை திறக்க வாய்ப்பில்லை என அரசு சார்பில் கூறப்பட்டது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை திறப்பதில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த விஷயத்தில் அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்து விசாரணையை நவம்பர் மாதம் 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.






