தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க திமுக மீண்டும் வலியுறுத்தல்..!
சென்னை நீட் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதம் குறித்து, திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறுகையில்:நீட் என்பது ஒரு தீமை; இதைத்தான் கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் கூறி வருகிறோம். தயவுசெய்து நீட் தேர்வை ரத்து செய்யுங்கள், அதன் மூலம் மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தாதீர்கள்.
ஒன்றிய அரசு ‘அனைவருக்கும் ஒரே கொள்கை’ (one size fits all) என்ற நிலைப்பாட்டை வைத்துள்ளது, இது போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு அது சாத்தியமே இல்லை. தமிழ்நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பும், மாணவர்களின் லட்சியங்களும் முற்றிலும் மாறுபட்டவை. ஏழை எளிய மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பையும் அணுகலையும் வழங்குங்கள். ஆனால் அவர்கள் நீட் தேர்வையும், அதன் மூலம் பயிற்சி மைய மாஃபியாக்களையும் (coaching class mafia) கொண்டு வந்துள்ளனர்.
இவை அனைத்திற்கும் மேலாக, தொடர்ந்து வினாத்தாள்கள் கசிந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வினாத்தாள் கசிவு ஏற்படுகிறது. எனவே, தயவுசெய்து தமிழ்நாடு மாநிலத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்து ரத்து செய்யுங்கள்; மற்ற மாநிலங்கள் அது குறித்து அவர்களே முடிவு செய்யட்டும்.





