புதுச்சேரி சென்டாக் மாணவர் சேர்க்கை தொடக்கம்..!
புதுச்சேரியில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான நீட் (NEET) அல்லாத இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் ரங்கசாமி வியாழக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்தார். மொத்தம் 10,810 இடங்களுக்கான இந்தச் சேர்க்கை செயல்முறைக்கு, தகுதியுள்ள மாணவர்கள் இன்று (மே 14) மாலை 4 மணி முதல் மே 29-ஆம் தேதி மாலை 5 மணி வரை சென்டாக் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சென்டாக் (CENTAC) நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேட்டின்படி, இளநிலை தொழில்முறை படிப்புகள், கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் நுண்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று (மே 15) தொடங்குகிறது. இதற்கான தகவல் கையேட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் வளர்ச்சித் துறை ஆணையர் கிருஷ்ணமோகன் உப்பு மற்றும் கல்வித்துறைச் செயலாளர் முகமது ஹாசன் அபித் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நீட்-அல்லாத தொழில்முறை படிப்புகள் (6,490 இடங்கள்): பொறியியல், செவிலியர், துணை சுகாதார அறிவியல், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் கால்நடை அறிவியல். கலை மற்றும் இதர படிப்புகள் (4,320 இடங்கள்): கலை, அறிவியல், வணிகவியல், நுண்கலை, தொழிற்கல்வி மற்றும் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பாதுகாப்பு, குற்றவியல், தடய அறிவியல் போன்ற சிறப்பு படிப்புகள்.
விண்ணப்பப் பதிவு தொடக்கம்: 14.05.2026 (இன்று மாலை 4:00 மணி முதல்)
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29.05.2026 (மாலை 5:00 மணி வரை)
ஆர்வமுள்ள மாணவர்கள் www.centacpuducherry.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவான தகவல்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





