தமிழகத்திற்கு மேலும் ரூ.1000 கோடி நிதி வழங்க முதல்வர் பிரதமர் மோடியிடம் கோரிக்கை!
கொரொனாவை தடுக்க பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரொனா பரவலை தடுப்பதில் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரொனா பரிசோதனைக்கு பயன்படும் ஈசிஆர் மற்றும் ராபிட்ஸ் கருவிகள் பெருமளவு வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அதேபோல் மருத்துவர்களுக்கான கவச உடைகள் என முகக் கவசங்கள் மற்றும் வெண்டிலேட்டர் களை தேவையான அளவுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கொரொனா தடுப்பு பணிகளுக்காக தமிழக முன்பே கேட்ட 12,000 கோடி ரூபாயை வழங்குவதுடன் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஆயிரம் கோடி ரூபாய் தரவேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கான மாநில பேரிடர் நிவாரண நிதி 64.6 5 விழுக்காடு மட்டுமே உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் அதே நேரத்தில் பிற மாநிலங்களுக்கு 120. 3 3 விழுக்காடு அதிகரிக்க பட்டிருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

மேலும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழகத்துக்கான பங்கை உடனடியாக தரவேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். கொரொனா பரவலை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்த முதலமைச்சர் பழனிசாமி மாநிலங்களுக்கு இடையே பயணிகள் போக்குவரத்தை அனுமதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
மாநிலங்களுக்கு இடையே ரயில் மற்றும் லாரி மூலம் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அமைப்புசாரா மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதற்கு தேவையான கூடுதல் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மேம்படுத்த சிறப்பு தொகுப்பு அறிவிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.






