--- --:--:-- --

முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!

02

விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 4 தேர்தல் வழக்குகளில் முதல்வர் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க. தலைவர் விஜய் 1,20,365 வாக்குகளைப் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகரை 53,715 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைய செய்தார். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் 91, 381 வாக்குகளைப் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட இனிகோ இருதயராஜை விட 27,416 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

 

 

இந்நிலையில் முதல்வர் விஜய் தாக்கல் செய்த தேர்தல் வேட்பு மனுக்களில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி இருப்பதாகவும், சொத்து விவரங்களை மறைத்துள்ளது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது என்பதால் அவரின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி பெரம்பூர் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

 

 

இதே போல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 4 வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன், விஜய், தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon