சென்னை மெட்ரோவில் புதிய கட்டுப்பாடுகள்; விதிமீறினால் ரூ.2,500 அபராதம்
சென்னை மெட்ரோவில் புதிய கட்டுப்பாடுகள்; விதிமீறினால் ரூ.2,500 அபராதம்
மெட்ரோ ரயிலில் விதிமீறல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ.500-இலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு, ஒழுங்கு மற்றும் சிரமமில்லாத பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் பயணிகள் மொபைல் போனில் உரத்த குரலில் பேசுவதையும், ஸ்பீக்கர் மோடில் ஆடியோ அல்லது வீடியோ ஒலிக்கவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், இசை அல்லது பிற ஒலிகளை கேட்கும்போது கட்டாயம் ஹெட்போன் அல்லது இயர்போன் பயன்படுத்துமாறும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. விதிமுறைகளை பின்பற்றி மற்ற பயணிகளின் வசதியையும் அமைதியையும் கருத்தில் கொண்டு பயணிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





