--- --:--:-- --

இரு மலையாள செய்தி சேனல்களுக்கு 48 மணி நேர தடை..! டெல்லி வன்முறையை மிகைப்படுத்தியதாக குற்றச்சாட்டு!!

IMG-20200307-WA0046

டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியதில், சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்ததாகக் கூறி இரண்டு மலையாள செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு 48 மணி நேரம் தடை விதித்துள்ளது.

 

கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை வடகிழக்கு டெல்லியில் வரலாறு காணாத வன்முறை வெடித்தது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு என இரு தரப்பாரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்து வன்முறைக் களமாக மாறியது. கல்வீச்சு, ஆயுதங்களால் தாக்குதல், தீ வைப்பு, போலீஸ் துப்பாக்கிச் சூடு என இந்த வன்முறையில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

 

இந்த வன்முறை தொடர்பாக மத்திய அரசு தற்போது பல்வேறு நவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கலவரத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.கலவரத்தை தூண்டும் விதமாக வெறுப்பு பேச்சுக்களை பேசியவர்கள் மீதும் வழக்குகள் பாய்ந்து வருகின்றன.

 

இதுபோல் இந்த வன்முறை காட்சிகளை மிகைப்படுத்தியும், ஒரு சார்பு நிலையாகவும் செய்திகள் வெளியிட்டதாக மீடியாக்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதன் ஒரு கட்டமாக கேரளாவைச் சேர்ந்த மீடியா ஒன், ஆசியா நெட் ஆகிய மலையாள செய்தி சானல்களின் ஒளிபரப்புக்கு 48 நேர தடை விதித்துள்ளது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் .

 

இதன்படி , கடந்த பிப்ரவரி 25-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியது தொடர்பாக ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் சேனல்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியிலிருந்து 48 மணி நேரத்திற்கு தடை விதிப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை தெரிவித்துள்ளது.

 

ஏசியாநெட் நியூஸ் சானலில், ஒரு வழிபாட்டுத்தலத்தின் மீதான தாக்குதலை மிகைப்படுத்தி காட்டியதாகவும், ஒரு சமுதாயத்திற்கு சாதகமாக செயல்பட்டது போல் தெரிவதாகவும் தகவல் ஒலிபரப்புத்துறை கூறியுள்ளது. மீடியா ஒன் தொலைக்காட்சியின் செய்திகள் சிஏஏ ஆதரவாளர்களின் கலவரத்தின் மீது மட்டுமே கவனத்தை குவிப்பதாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

 

இந்த இரண்டு சேனல்களிலும் செய்தியாளர்களின் வார்த்தைகள் இரு சமுதாயத்திடையேயான நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இருந்ததாகவும் தகவல் ஒலிபரப்புத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon