கொரோனா வைரஸ் : தமிழக அரசும் பயோ மெட்ரிக் முறைக்கு விலக்கு அளிக்க வேண்டும்..!அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
கொரோனா வைரஸ் காரணமாக அலுவலகங்கள் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைக்கு மத்திய அரசு விலக்களித்தது போன்று
தமிழக அரசும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறைக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா .அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில் மார்ச் 31-ம் தேதி வரை பயோமெட்ரிக் முறைக்கு விலக்கு அளித்து
ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவேடுகளில் மட்டும் தங்களது வருகையை பதிவு செய்ய மத்திய அரசின் கீழ் உள்ள அனைத்துத்துறை அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விரல்கள் மூலம் அதிகம் பரவும் என்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. காரணம் பயோமெட்ரிக் கருவியில் அடுத்தடுத்து தொடர்ந்து கைவிரல்கள் பதிவிடுவதால் வைரஸ் பரவக்கூடும் என்பதால் தற்காலிகமாக பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு விலக்களித்ததை போன்று தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயோமெட்ரிக் வருகை பதிவை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வருகை பதிவேடு முறையை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் பயன்படுத்த உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என அதன் நிறுவனத் தலைவர் சா.அருணன் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





