அமைச்சரிடமே லஞ்சம்! * அம்பலமானது திருச்செந்தூர் கோயில் ஊழல்கள்.. * பக்தர்களின் குமுறலால் கிடைத்தது விமோசனம்!
ஓம் சரவணபவ என்ற மந்திரம் ஒலிக்கும் திருச்செந்தூர் கடற்கரையில், அலைகளின் சத்தத்தை விட பக்தர்களின் குமுறல் சத்தம்தான் கடந்த சில ஆண்டுகளாகவே பலமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கோயிலில் நடைபெறும் முறைகேடுகளால் பக்தர்கள் கொதித்துப் போயிருந்தனர். ‘அரக்கனை அழிக்க அவதரித்த குமரனின் சந்நிதியிலேயே, பக்தர்களைச் சுரண்டும் அரக்கத்தனம் அரங்கேறுகிறதே’ என்று குமுறிய பக்தர்களின் மன வலிக்கு இப்போது விடிவுகாலம் பிறந்திருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் அதிரடி ‘சிங்க நடை’, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
முருகன் சந்நிதியில் அரங்கேறிய வசூல் வேட்டை!
நெஞ்சில் ஈரமில்லாமல், பக்தி என்பதை வெறும் வியாபாரமாக மாற்றிவிட்ட சில புல்லுருவிகளின் கூடாரமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாறிப்போயிருந்தது உண்மைதான். சாமி தரிசனம், அர்ச்சனை, விபூதிப் பிரசாதம் என ஒவ்வொன்றிற்கும் ஒரு கட்டணம்… அதுவும் அதிகாரப்பூர்வ கட்டணம் அல்ல, அப்பட்டமான லஞ்சக் கட்டணம்!
ஏழை, எளிய மக்கள் கையில் காசில்லாமல், சுட்டெரிக்கும் வெயிலில் மணிக்கணக்காகக் காத்துக் கிடக்க, கரன்சி நோட்டுகளை நீட்டுபவர்கள் மட்டும் ‘விஐபி’களாக விறுவிறுவென உள்ளே செல்லும் அவல நிலை நீடித்து வந்தது. ‘முருகா..உன்னைத் தரிசிக்கவும் காசு தர வேண்டுமா?’ என்ற ஏழை பக்தனின் கண்ணீர்தான், இந்த அதிரடி மாற்றத்திற்கு அச்சாரமாக அமைந்திருக்கிறது.
சாதாரண உடையில் சென்ற ‘ரியல்’ ஹீரோ!
பொதுவாக அமைச்சர்கள் வருகிறார்கள் என்றாலே, மாவட்ட நிர்வாகமே அலறியடித்துக் கொண்டு பச்சைக் கம்பளம் விரிக்கும். ஆனால், முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இருக்கும் ஒருசில அமைச்சர்கள், வழக்கமான அரசியல் பாணியைப் பின்பற்றாமல் ‘ஆகசன்’ மோடில் இறங்கியிருக்கிறார்கள். அதற்கு ஆகச்சிறந்த உதாரணம், துடிப்புமிக்க இளைஞரான அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்.
அதிகாரிகள் பட்டாளம் இல்லை, சைரன் கார்கள் இல்லை, பந்தாக்கள் எதுவுமே இல்லை. வெள்ளிக்கிழமை காலையில், முகக் கவசத்தை மாட்டிக்கொண்டு, மிகச் சாதாரணமான உடையில், பொதுமக்களோடு பொதுமக்களாக திருச்செந்தூர் கோயிலுக்குள் நுழைந்தார் அமைச்சர். அவருடன் சென்றது ஒரேயொரு உதவியாளர் மட்டும்தான்.
அமைச்சரை அடையாளம் தெரியாத ஒரு அர்ச்சகர், ‘4000 ரூபாய் கொடுத்தால், க்யூவில் நிற்காமல் உடனே விஐபி தரிசனம் கூட்டிட்டுப் போறேன்’ என்று டீல் பேசியிருக்கிறார். இன்னொரு தரப்போ, நபர் ஒருவருக்கு 1000 முதல் 1500 ரூபாய் வரை கறாராக பேரம் பேசியிருக்கிறது.
உதவியாளரை அனுப்பி, அந்த அர்ச்சகரிடம் அமைச்சர் ‘ஜி-பே’ மூலம் பணத்தையும் அனுப்ப வைத்தார். கரன்சி டிஜிட்டலாக மாறிய அடுத்த நொடி, முகக்கவசத்தைக் கழற்றினார் அமைச்சர். அங்கே நின்றிருந்த அர்ச்சகர்களுக்கும், புரோக்கர்களுக்கும் அடிவயிற்றில் புளி கரைத்தது.
கையும் களவுமாக சிக்கிய குள்ளநரிக் கூட்டம்!
பணத்தைப் பெற்றுக்கொண்டு, ‘வாருங்கள் போகலாம்’ என்று அழைத்துச் சென்ற அர்ச்சகர்களை கையும் களவுமாகப் பிடித்து அமர வைத்தார் அமைச்சர். ‘எங்களிடம் ஆட்டையப் போட்டுவிட்டு எங்கே தப்பிக்கப் பார்க்கிறீர்கள்?’ என்ற பாணியில், தவறு செய்தவர்களிடம் இருந்து ஸ்பாட்டிலேயே கைப்பட மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கப்பட்டது.
அர்ச்சகர்களோடு அமைச்சரின் இந்த ஆட்டம் முடியவில்லை. நேராகக் கோயிலின் நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்த அமைச்சர் ரமேஷ், அங்கிருந்த கோப்புகளைத் தட்டிப்பார்த்தார். லஞ்சப் பணத்தை ஊழியர்களும், அர்ச்சகர்களும் எப்படிப் பங்கு பிரித்துக் கொள்கிறார்கள் என்ற பகீர் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின.
அன்னதானக் கூடத்திற்குச் சென்று, உணவின் தரம் குறித்து மக்களிடம் நேரடியாகக் கேட்டறிந்ததோடு, அவரே அமர்ந்து சாப்பிட்டார். இதுவரை முறைகேடாகக் குவிக்கப்பட்ட ரொக்கம் எவ்வளவு, இதன் பின்னணியில் இருக்கும் பெரும் தலைகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர், ‘தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்திருப்பது, திருச்செந்தூர் வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறது.
பல்லிளித்த அமைச்சர் பார்த்திபன் செயல்!
அமைச்சர் ரமேஷ் போன்றவர்களின் அதிரடிச் செயல்பாடுகள் முதல்வர் விஜய்யின் அமைச்சரவைக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், இன்னொரு பக்கம் மக்களின் கோபக்கனலில் வெந்து கொண்டிருக்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன்.
பக்ரீத் பண்டிகை, முகூர்த்த நாள், வார இறுதி விடுமுறை என மக்கள் கூட்டம் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதியது. சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதே தவிர, தரையிறங்கிய பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நள்ளிரவிலும் பேருந்து இல்லாமல் கைக்குழந்தைகளுடன் தவித்த பயணிகள், அங்கே ஆய்வு செய்ய வந்த அமைச்சர் பார்த்திபனை முற்றுகையிட்டனர்.
‘துறையூருக்குப் போக 10.30 மணிக்கு புக் பண்ணினேன். இப்போ மணி 11.45 ஆகுது. பஸ்ஸை ஆளக் காணோம், அதிகாரிகளும் முறையா பதில் சொல்லல’ என்று ஒரு பயணியின் ஆதங்கக் குரல் அமைச்சரின் காதுகளில் விழுந்தது. அதற்கு மக்கள் பிரதிநிதியான அமைச்சர் பார்த்திபன் என்ன சொல்லியிருக்க வேண்டும்? ‘உடனே ஏற்பாடு செய்கிறேன்’ என்றுதானே ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும்?
ஆனால் அவரோ, ‘நீ நல்லா சாப்பிட்டு இருக்க; நான் இன்னும் சாப்பிடல’ என்று மிக அலட்சியமாக, ஒருமையில் பேசிவிட்டு நகர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, ஒட்டுமொத்த பொதுமக்களின் கண்டனத்தையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.
தொடரட்டும் ரமேஷின் வேட்டை!
ஒரு துறையின் அமைச்சர், நள்ளிரவில் பசியோடு தவிக்கும் மக்களின் வலியைக் கேலி பேசுகிறார். இன்னொரு துறையின் அமைச்சரோ, பசியோடு முருகனைப் பார்க்க வரும் பக்தர்களின் வழிப்பறியைத் தடுக்க மாறுவேடத்தில் களமிறங்குகிறார்.

அமைச்சர் ரமேஷ் அவர்களே.. உங்களின் இந்த அதிரடி ஆட்டம் திருச்செந்தூரோடு நின்றுவிடக் கூடாது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பல ஆன்மீகத் தலங்களிலும் இதே புரோக்கர் ராஜ்ஜியமும், லஞ்ச வேட்டையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பக்தி என்ற பெயரில் எளிய மக்களின் பாக்கெட்டுகளைப் பறிக்கும் இந்த ‘லஞ்சக் கும்பல்’ கூண்டோடு ஒழிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் தற்காலிகமாக தப்பிவிடக் கூடாது; அவர்களின் பின்னணியில் இருக்கும் கருப்பு ஆடுகள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் பாய வேண்டும்.
அப்போதுதான், உண்மையான ஆன்மீக பூமியில் அறநெறி நிலைபெறும். அமைச்சரின் இந்த அதிரடி வேட்டை, மற்ற கோயில்களுக்கும் பரவட்டும் என்பதே ஒட்டுமொத்த பக்தர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு!







