மருத்துவ சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!!
சென்னையில் நேற்று நடைபெற்ற மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்றவர்களில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க அரசால் சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்றைய கவுன்சிலிங்கில், நீட் தேர்வில் வெற்றி பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்களில் 262 பேர் பங்கேற்றனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற இந்த மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியானதில் 4 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று நடந்த கலந்தாய்வின் முடிவில் நேரு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு நடந்த நிகழ்ச்சியில், கவுன்சிலிங்கில் மருத்துவ கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில் இந்த கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக பரிசோதனை நடத்தப்படலாம் எனவும் தெரிகிறது.






