--- --:--:-- --

மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி..!

8

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியலின் மிக முக்கியமான ஆளுமையுமான ஐயா நல்லகண்ணு, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

100 வயதைக் கடந்த மூத்த தலைவர் நல்லகண்ணு, கடந்த சில காலமாகவே வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி, எதிர்பாராத விதமாக வீட்டில் தவறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பும் உண்டானதால், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் குணமடைந்து அவர் வீடு திரும்பினார்.

 

மீண்டும் அவருக்கு அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 1) இரவு திடீரென பாதிப்பு அதிகரித்தது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

தற்போது, மூத்த மருத்துவர்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வயது முதிர்வு காரணமாக அவருக்குச் சுவாசப் பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதால், அவருக்குத் தேவையான உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon