டெல்லியில் தலாய் லாமாவுக்கு சொகுசு பங்களா ஒதுக்கீடு!
அதிகார மையத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள லுட்யன்ஸ் டெல்லியில் (Lutyens’ Delhi) தலாய் லாமாவுக்கு மத்திய அரசு ஒரு பங்களாவை வழங்கியுள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்குத் தெரியவந்துள்ளது. 20, பண்டிட் ரவிசங்கர் சுக்லா லேன் பகுதியில் உள்ள அந்த பங்களா கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அப்பகுதிக்கு சென்றபோது, பங்களாவின் நுழைவாயிலில் “காடன் போட்ராங்” என்ற பெயர்ப்பலகை காணப்பட்ட நிலையில், வெளியே கட்டுமான கழிவுகள் கிடந்ததை பார்க்க முடிந்தது.
2011-ஆம் ஆண்டில் திபெத்திய பவுத்த ஆன்மிகத் தலைவர் (தலாய் லாமா) தனது அரசியல் அதிகாரத்தைத் துறக்க முடிவு செய்தபோது, அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்ட தலாய் லாமாவின் அலுவலகமே ‘காடன் போட்ராங்’ ஆகும். தலாய் லாமா இந்த அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். “2011-ஆம் ஆண்டில் புனித தலாய் லாமா, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திபெத்தியத் தலைமையிடம் தனது அரசியல் அதிகாரத்தைத் தாமாக முன்வந்து ஒப்படைத்ததைத் தொடர்ந்து, புனித தலாய் லாமாவின் அலுவலகமான காடன் போட்ராங், 1908-ஆம் ஆண்டின் இந்தியப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒரு தனியார் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவில் இதனை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக முறையாக நிறுவுவதற்காக, தர்மசாலாவில் உள்ள சார்-பதிவாளரிடம் இந்த பதிவு மேற்கொள்ளப்பட்டது. தலாய் லாமா என்ற அமைப்பையும் அவரது ஆன்மிகப் பணிகளையும் பாதுகாத்து நிலைநிறுத்துவதோடு, அவரது மனிதாபிமானத் தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்த அறக்கட்டளை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” என்று தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறுகிறது.
வட்டாரங்களின் தகவல்படி, வெளியுறவுத் துறை அமைச்சகம் தலாய் லாமாவுக்காக இந்த பங்களாவை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு, ஒரு பங்களாவைக் கோரி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. இருப்பினும் அது யாருக்கு ஒதுக்கப்படும் என்பது அதில் குறிப்பிடப்படவில்லை. செயல்பாட்டு நோக்கத்திற்காக 2025 அக்டோபரில் இந்த வகை-7 பங்களாவை வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மாற்றியளித்தது.
இது தொடர்பாகத் திங்கட்கிழமை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அனுப்பிய மின்னஞ்சலுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் பதிலளிக்கவில்லை. இந்த ஆண்டு ஜூலை மாதம், இந்த பங்களாவை பராமரிக்கும் மத்திய பொதுப்பணித் துறை, போர்டா கேபின் அமைத்தல், வெளிப்புறச் சுற்றுச்சுவரைப் பலப்படுத்துதல், கன்சர்டினா சுருள் கம்பிவேலி அமைத்தல், கதவுகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை நிறுவுவதற்காக ரூ.34.94 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளியை கோரியிருந்தது.
தலாய் லாமாவின் இணையதளத்தின்படி, தலாய் லாமா என்ற அமைப்பு தொடரும் என்றும், தனது வாரிசான 15-வது தலாய் லாமாவை அங்கீகரிப்பதற்கு காடன் போட்ராங் அறக்கட்டளையே முதன்மைப் பொறுப்பாக இருக்கும் என்றும் 2025 மே 21 அன்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்.
“திபெத்திய பவுத்த மரபுகளுக்கு ஏற்ப எதிர்காலத் தலாய் லாமாக்களை அடையாளம் காண்பது, அவர்களின் கல்வி மற்றும் நலனை மேற்பார்வையிடுவது ஆகியவற்றுக்கு இந்த அறக்கட்டளை பொறுப்பாக இருக்கும். தனது ஆன்மிகப் பொறுப்புகளுக்கு அப்பால், திபெத்திய சமூகங்களுக்கு ஆதரவளிப்பதுடன், புனிதரின் உலகளாவியப் பொறுப்புணர்வு என்ற தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தும் கல்வி, மனிதாபிமான மற்றும் சுற்றுச்சூழல் முன்முயற்சிகளிலும் இந்த அறக்கட்டளை தீவிரமாக ஈடுபடுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





