இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!
இந்திய சினிமாவின் மூத்த கலைஞரும் முன்னோடி இயக்குநருமான சிங்கீதம் சீனிவாச ராவ் உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய இந்திய சினிமாவின் முன்னோடி என அழைக்கப்படுபவர் சிங்கீதம் சீனிவாச ராவ். வயது 95. உதவி இயக்குநராக சினிமாவில் தனது வாழ்க்கையை தொடங்கிய சிங்கீதம் சீனிவாச ராவ், பிற்காலத்தில் தனது புதுமையான, சோதனை முயற்சிகளுக்குப் பெயர் பெற்றவராக விளங்கினார்.
அவர் எடுத்த திரைப்படங்கள் இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநராக அவரை மாற்றியது. குறிப்பாக நடிகர் கமலுடன் இணைந்து சிங்கீதம் உருவாக்கிய திரைப்படங்கள் இந்திய சினிமாவில் புதிய அடையாளங்களாக மாறின. வசனம் இல்லாமல் முழுக்க முழுக்க பின்னணி இசையை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட ‘பேசும் படம்’ இந்த ஜோடியின் மிகப்பெரிய மைல்கல் படமாக அமைந்தது.
அனைவராலும் பாராட்டப்பட்ட ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ‘அப்பு’ என்ற கேரக்டரில் கமல்ஹாசனை மிக வித்தியாசமாக காண்பித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதேபோல், தொழில்நுட்பத்தை கொண்டு ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் சாதனை படைத்தார். தமிழ் சினிமாவை தவிர, தெலுங்கில் முதல் டைம் டிராவல் திரைப்படமான ‘ஆதித்யா 369’, ‘மயூரி’ உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார்.
தேசிய விருது, நந்தி விருது, ஃபிலிம்பேர் விருது மற்றும் கர்நாடக மாநில விருதுகள் பலவற்றை வென்றுள்ள சிங்கீதம் சீனிவாச ராவுக்கு இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தது. 95 வயதை நெருங்கிய நிலையிலும் சினிமா மீதான காதலைக் கைவிடாத சிங்கீதம் சீனிவாச ராவ் அண்மையில் ‘சிங் கீதம்’ என்கிற பெயரில் தனது 61-வது திரைப்படத்தை இயக்கி ரிலீஸ் செய்தார்.
இந்த நிலையில் தான் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று (அக் 3) இரவு நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





