கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்!
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தி தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திருசுலி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் நடந்ததாக தான் கூறவில்லை என்றும் எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று தான் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க முடியாது எனவும் இந்த விவகாரத்தில் எந்த வித வெளிப்புற அழுத்தத்திற்கும் ஆட்படாமல் நியாயமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பெண் மாவட்ட ஆட்சியரின் கண்ணியம் மற்றும் மரியாதையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருவதாகவும் இது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல் பொது வெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கும் உத்தரவிடக்கோரி மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





