தீபத்தூண் பகுதி கோயிலுக்கு சொந்தமா? இல்லையா? – மதுரை ஆட்சியருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு கால நடைமுறையை மாற்றக் கூடாது என அரசு தரப்பு வாதிட்ட நிலையில் விசாரணை இன்றும் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் ராமரவிக்குமார் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்கு பதிலாக பழமையான தீபத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் தீபம் ஏற்றக் கோரிய உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு, தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. இன்றைய விசாரணையில், “திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத்தூண் அல்ல; எல்லைக் கல். 100 ஆண்டுகளுக்கு மேலாக கோயில் அருகே தீபம் ஏற்றப்படுகிறது. தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மனுதாரர் கூறுகிறார்; ஆங்கிலேயர் காலத்தில் மலைப்பகுதிகளில் நிலத்தை அளவீடு செய்ய கல்தூண் பயன்படுத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணையில் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்புக்கு நீதிபதிகள், “தீபத்தூண் பகுதி கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமா? இல்லையா? ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள்” என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு, “தீபத்தூண் பகுதி யாருக்குச் சொந்தமானது என்பதை அரசும், வருவாய்த்துறையும்தான் கூற முடியும். ஆட்சியர் என்ற முறையில் அங்கு இருக்கும் நிலவரம், விவகாரங்கள் குறித்து மட்டுமே கூற முடியும்” எனத் தெரிவித்து, தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




