--- --:--:-- --

புயலின் பாதை மீண்டும் மாறியது!

2

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (17.11.2026) நிலவிய “அக்வான்” (Akvan) புயல் (Cyclonic Storm) வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை (18.11.2026) 05:30 மணி அளவில் தீவிர புயலாக (Severe Cyclonic Storm) வலுப்பெற்று, இன்று காலை 08:30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது.

 

 

இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ம் தேதி நண்பகல் நரசாபூர் மற்றும் பூரிக்கு இடையே வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை தீவிரப் புயலாக (Severe Cyclonic Storm) கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 110 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

 

 

சுமார் 3.1 கிமீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இன்று மற்றும் 19.11.2026 தென் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

 

 

இன்று முதல் 22.11.2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. அதேபோல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

 

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

 

 

மேலும் தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மற்றும் 20.11.2026 வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon