ஜே.இ.இ மெயின் 2026 – 9 கேள்விகள் நீக்கம்.
தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ மெயின் 2026-ஆம் ஆண்டின் முதற்கட்டத் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த விடைக்குறிப்பில், மொத்தம் 9 கேள்விகள் நீக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இந்த இறுதி விடைக்குறிப்பினை அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.in என்ற முகவரியில் இருந்து எவ்வித லாகின் தகவல்களுமின்றி பி.டி.எஃப் கோப்பாக நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பொதுவாக, முதற்கட்டமாக வெளியிடப்படும் தற்காலிக விடைக்குறிப்புகள் மீது மாணவர்கள் தெரிவிக்கும் ஆட்சேபனைகளை அடிப்படையாகக் கொண்டு, அவை பாட வல்லுநர்களால் ஆய்வு செய்யப்படும். அவர்களின் பரிந்துரையின் பேரிலேயே இந்த இறுதி விடைக்குறிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறை நீக்கப்பட்டுள்ள 9 கேள்விகளால் மாணவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு விதிகளின்படி, ஒரு கேள்வி நீக்கப்படும்போது அந்த ஷிப்ட் தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அதற்கான முழு மதிப்பெண்களும் வழங்கப்படும். இது மாணவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண் மற்றும் பெர்சென்டைல் அளவை சற்று உயர்த்த வாய்ப்புள்ளது.இந்த சூழலில், கோச்சிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா தேசிய தேர்வு முகமை மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளது. தற்காலிக விடைக்குறிப்புகளில் பிழைகள் மலிந்து காணப்படுவதாகவும், இது மாணவர்களின் தரவரிசையைப் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 17 கேள்விகளில் குளறுபடிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, அதில் 10 கேள்விகள் அடிப்படைத் தவறுகளைக் கொண்டிருப்பதால் அவற்றுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மீதமுள்ள 7 கேள்விகளில் தொழில்நுட்ப ரீதியிலான தவறுகள் மற்றும் தெளிவற்ற விடைகள் இருப்பதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
ஜே.இ.இ மெயின் 2026 முதற்கட்டத் தேர்வு முடிவுகள் இன்று பிப்ரவரி 16-ஆம் வெளியாக உள்ளது. மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களை இறுதி விடைக்குறிப்புடன் ஒப்பிட்டுத் தோராயமான மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த முடிவுகளின் அடிப்படையில் முதல் 2.5 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள்.
இந்த முதற்கட்டத் தேர்வில் திருப்தியடையாத மாணவர்கள், வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்விற்கு விண்ணப்பித்து தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




