ரூ 2.26 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சித்த மருத்துவமனை அமைக்கும் பணி தொடக்கம்..!
செய்தித்துறை அமைச்சர் மு.பெசாமிநாதன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா முன்னிலையில் அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நம்பியாம்பாளையம், ஒருங்கிணைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், தண்டுக்காரன்பாளையம், ஆலத்தூர் துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்து தேவர் சித்த மருத்துவமனை அமைக்கும் பணி என மொத்தம் ரூ 2.26 கோடி மதிப்பில் துவக்கி வைத்துள்ளார்.
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நம்பியாம்பாளையம் ஒருங்கிணைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், தண்டுக்காரன்பாளையம் ஆகிய துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்து தேவர் சித்த மருத்துவமனை அமைக்கும் பணி என மொத்தம் ரூ 2.26 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைத்தார்.
செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத்துறை, ஏனைய துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரொனா தொற்று படிப்படியாக குறைந்துள்ளது.
முதலமைச்சர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை துவக்கி வைத்தார். இது மருத்துவர்கள் நோயாளிகளின் இல்லத்திற்கே சென்று தேவையான சிகிச்சை அளிக்கும் சிறப்பான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் 2,499 பேர், நீரிழிவு நோயாளிகள் 1,111 பேர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள் 982 பேர், நோய் தடுப்பு பராமரிப்பு 83 பேர், இயன்முறை மருத்துவம் 75 நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர்.
முதலமைச்சர் அவர்கள் கூறியதாவது கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரொனா நிவாரண உதவி தொகை இரண்டு தவணையாக 2000 ரூபாய் என மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் 14 அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
அதேபோல் முதலமைச்சர் வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்காக விவசாயிகள் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு தீர்வு காண்பதற்காக முதலமைச்சர் அவர்கள் நீர்ப்பாசனத்துறை எனும் புதிய துறையை உருவாக்கி அதற்கு அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சரை நியமித்து உள்ளார்.
அதேபோல் நகர்ப்புற பேருந்துகளில் மகளிர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவசமாக பயணம் மேற்கொள்வதற்காக இலவச பேருந்து திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி உள்ளார்கள் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
அந்த வகையில் அவினாசி ஊராட்சி ஒன்றியம் நம்பியாம்பாளையத்தில் 1.40 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், தண்டுக்காரன்பாளையத்தில் 25 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் மற்றும் ஆலத்தூரில் 25 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்தும் அரசு பொது மருத்துவமனையில் 3 லட்சம் மதிப்பில் நன்கொடையாளர்கள் வழங்கிய குளிர்சாதன இயந்திரங்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கிய மின்னாக்கி மற்றும் ஆலத்தூர், குலமுத்தூர், நம்பியாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 50 லட்சம் மதிப்பீட்டில் வழங்கிய மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை மருத்துவமனை பயன்பாட்டிற்கு வழங்கி சேவூர் சுகாதார நிலையத்தில் 8 லட்சம் மதிப்பீட்டில் சித்த மருத்துவமனை கட்டடம் அமைக்கும் பணி என மொத்தம் 2.26 கோடி மதிப்பீட்டில் துவக்கப்பட்டு உள்ளது என செய்தித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்), மரு. பாக்கியலட்சுமி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்), மரு. ஜெகதீஷ் குமார், வட்டார மருத்துவ அலுவலர் திரு சக்திவேல், பொதுப்பணித்துறை (கட்டடங்கள்) உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் திரு கோவிந்தராஜ் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






