விஜய் வீடு அருகே தலைமைச் செயலகமா?
பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.2,047 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்குத் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வீடுகள் வழங்கப்படும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறி இத்திட்டம் கொண்டுவரப்படுகிறதா? முதலமைச்சர் விஜய்யின் இல்லத்திற்கு அருகில் இருக்கிறது என்பதற்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுகிறதா?” என அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி 110 விதியின் கீழ் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.இதைத் தொடர்ந்து, சென்னையில் அதிநவீன வசதிகளுடன் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலப்பரப்பில் 15 அடுக்குகளுடன் 20 லட்சம் சதுர அடியில் இக்கட்டடம் அமையவுள்ளது.
இந்நிலையில், இத்திட்டம் சட்டரீதியாகவும் சுற்றுச்சூழலியல் ரீதியாகவும் பல்வேறு விதிமீறல்களைக் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சியான தி.மு.க தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், பட்டினம்பாக்கத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் வீடு அருகே புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுகிறதா என்றும் தி.மு.க ராஜ்ய சபா எம்.பி வில்சன், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது சென்னை உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தமிழக அரசின் உறுதியை மீறும் செயல் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க ராஜ்ய சபா எம்.பி-யும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அரசு ஊழியர் குடியிருப்புகளில் வசித்து வந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றியபோது, அதே இடத்தில் பல்லடுக்கு குடியிருப்புகளை கட்டி, அவை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அந்தக் குடியிருப்புகளிலேயே அரசு உழியர்களுக்கு வீடுகளை ஒதுக்கி மறுகுடியமர்த்துவதாக, வாரியமும் – தமிழ்நாடு அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தது. அதுமட்டுமின்றி, கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு, உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாறாக தற்போது அந்த இடம் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் சென்னை உயர்நீதிமன்றத்திடம் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறுவதாக இல்லையா? குறிப்பிட்ட அந்த இடம் CRZ-II மண்டலத்திற்குள் வருவதைக் கருத்தில் கொண்டால், அங்கு அனுமதிக்கப்படும் FSI 1.97-ஐ விடக் குறைவாக இருக்கக்கூடும்.
அந்த வகையில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இத்தகைய மிகப்பெரிய திட்டத்தை, குறுகலான சாலைகள் கொண்ட பகுதியில் அமைத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதும், மீனவர்களின் வாழ்வாதாரப் பகுதிகளை ஆக்கிரமிப்பதும் ஏற்கத்தக்கதா?
முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் இல்லத்திற்கு அருகாமையில் இருப்பதாலேயே புதிய தலைமைச் செயலகத்திற்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா? அவ்வாறு தேர்வு செய்யப்பட்டிருந்தால், இந்தத் திட்டத்தால் ஏராளமான மீனவர்கள் தங்கள் வாழ்விடங்களையும், பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளையும் இழக்கும் நிலை ஏற்படும் அல்லவா? மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் அவர்களின் சுதந்திரமான நடமாட்டமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




