திறந்த ஜீப்பில் சென்று பாஜக தலைவர் எல். முருகன் தாராபுரத்தில் வேட்புமனு தாக்கல்!
திருப்பூர் மாவட்ட தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக – பாஜக தொண்டர்கள் புடைசூழ திறந்த ஜீப்பில் முருகன் அழைத்துச் செல்லப்பட்டார்.
வரும் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு, நாளை கடைசி நாளாகும். இதனால், அரசியல் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக எதிர்கொள்கிறது. அக்கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநில பாஜக தலைவரான எல்.முருகன், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ரஞ்சிதா, அமமுக சார்பில் கலாராணி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், தாராபுரம் சட்டமன்ற பாஜக வேட்பாளரான எல்.முருகன், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் பவன்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்து, உறுதிமொழியை எல்.முருகன் வாசித்தார். முன்னதாக பாஜக – அதிமுக தொண்டர்கள் அவரை திறந்தவெளி வேனில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்கு முன்பு நடந்த ஊர்வலத்தில் பாஜக ஊடகப் பிரிவின் மாநில தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத், திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல், அதிமுக தரப்பில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் உள்பட கூட்டணி கட்சி மூத்த நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தாராபுரம் தொகுதியில் எல் முருகன் போட்டியிடும் நிலையில், நேற்று திமுக, மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு, கணக்கில் வராத தொகையை கைப்பற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




