மு.க.ஸ்டாலின் வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்றார். பின்னர், மு.க.ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, கொளத்தூர் தொகுதியில், 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
ஆனால் அப்போது முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சரிபார்ப்புக்கு எடுக்கப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்கள், திடீரென கோளாறாகி நின்று விட்டதாகவும், ஆறு வாக்கு சாவடிகளில் விவிபேடுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேடுகளை சரிபார்க்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு, இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




