காவிரி நீர் கடைமடையை சென்றடையுமா?
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், நாகை, திருவாரூர் பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணி முழுமையடையாத நிலையில், காவிரி நீர் கடைமடையை சென்றடையுமா என்ற ஏக்கத்தில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த 1ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைத்தார்.
வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஏறத்தாழ 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தின் காவிரிகொண்டான் ஆற்றில் இருந்து பிரியும் மூங்கில்அடி, பண்டாத்தான், கீரனேரி உள்ளிட்ட கிளை கால்வாய்களில் தூர்வாரும் பணி முழுமையடையாததால் காவிரி நீர் கடைமடையை சென்றடையுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
அதேபோல், தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் கிளை ஆறான அரசலாற்றில் தூர்வாரும் பணி நடைபெறாததால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புதர் மண்டிக் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாசன வசதிக்கு அரசலாற்றை நம்பியிருக்கும் நிலையில் அரசு உடனடியாக ஆற்றை தூர்வாரி நீர் தேக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, பாண்டி, குன்னலூர், இடும்பவனம், கீழப்பெருமலை, மேல பெருமலை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான விளை நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் மரைக்கா கோரையாற்றை தூர்வாரி 20 ஆண்டுகள் கடந்த நிலையில் விரைந்து அதையும் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




