--- --:--:-- --

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரவும் கொரோனா! பள்ளிகளை மூட அரசு தயங்குவது ஏன்?

school 01

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் மாணவர்கள் – ஆசிரியர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனினும் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு பள்ளி நடத்துவதில் அரசு பிடிவாதமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

அண்மையில், தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் இருந்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 16 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அனைத்து பள்ளிகளிலும் இருக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாணவர்களும் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

 

இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 8ஆம் தேதி முதல் ஒரு மாணவி பள்ளிக்கு வரவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரியவந்தது. பரிசோதனை செய்து பார்த்ததில், 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 

இதில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 4 மாணவிகள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அன்றே நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவில் மேலும் 36 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கை 56 ஆனது.

 

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியருக்கும், மதுக்கூர் அருகே ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகப் பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

 

இந்நிலையில், இன்று தஞ்சையில் அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், தாம்பரத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியை உட்பட 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் அதன் தாக்கம் அதிகளவில் உணரப்படுகிறது 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு ஏற்கனவே ஆல்-பாஸ் வழங்கிவிட்ட நிலையில், தொடர்ந்து வகுப்புகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் பாடங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வகுப்புகள் நடக்கின்றன.

 

அதேநேரம், பள்ளிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், தொடர்ந்து வகுப்புகளை நடத்துவது, பரவலுக்கு வழிவகுத்துவிடும்; குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு உண்டாகலாம் என்று பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, காலதாமதம் செய்யாமல் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon