மருத்துவ மாணவிகள் 10 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த டாக்டர்..!
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சந்திரசேகரன். அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் சந்திரசேகரன் மீது அவரிடம் அறுவை சிகிச்சை பயிற்சிக்கு சென்ற மருத்துவ மாணவிகள் 10 பேர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர்.
பயிற்சி பெண் மருத்துவர்களை தனியாக அழைத்துச் சென்று பயிற்சி தருவதாக கூறிய மருத்துவ பேராசிரியர் சந்திரசேகரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தனக்கு மட்டும் நடப்பதாக நினைத்திருந்த நிலையில் ஒரு கட்டத்தில் சந்திரசேகரன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுக்கும் அளவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
நடக்கும் கொடுமைகளைமாணவிகள் வைத்து குழுமி கொண்டிருந்த மருத்துவ மாணவிகள் 10 பேர் குழுவாக சென்று டீன் பாலாஜியை சந்தித்து சந்திரசேகரன் செய்யும் பாலியல் தொல்லைகளை பட்டியலிட்டுள்ளனர். ஆனால் பேராசிரியர் சந்திரசேகரன் மருத்துவர் சங்கத்தின் செல்வாக்கினால் தன் மீதான புகாரை விசாரிக்க விடாமல் தடுத்துள்ளார்.
இதையடுத்து கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட மாணவிகள் சந்திரசேகரன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மருத்துவ கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் குதிக்கப் போவதாக எச்சரித்ததால் மிரண்டுபோன டீன் பாலாஜி துறை ரீதியான விசாரணை நடத்தி சந்திரசேகர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அவரது உத்தரவின் பேரில் சந்திரசேகரை நிலைத் துறை ரீதியான நடவடிக்கையாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து உள்ளனர். ஆனால் சந்திரசேகரன் செல்வாக்கை பயன்படுத்தி தனது வீட்டின் அருகே உள்ள அண்ணாநகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றுப் பணிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
சாதாரண நிலையில் இருக்கும் நபர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நிலையில் காவல், மருத்துவம் போன்ற மகத்தான மக்கள் சேவை பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பெண்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்களால் நிகழும் பாலியல் தொல்லைகளுக்கு பணியிட மாற்றம் ஒன்றுதான் தண்டனையா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.






