ஊரடங்கில் கூடுதல் தளர்வு : ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி..! வாடிக்கையாளர்கள் வராததால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!!
ஊரடங்கில் கூடுதல் தளர்வாக ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஹோட்டல்களிலும் இன்று மேஜைகள் போடப்பட்டு தயார் நிலையில் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் வராததால் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால் பல ஹோட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு இந்த ஒரு மாதம் (ஆகஸ்ட்) முழுமைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேலும் சில கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் உணவகங்களில் இதுவரை பார்சல் மட்டும் என்ற நிலையில், இன்று முதல் 50% இருக்கைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பெரிய, நடுத்தர ஓட்டல்களில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப் uட்டு வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து தயார் நிலையில் காத்திருந்தனர்.
ஆனால் பல ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பெருத்த அதிர்ச்சி தான் காத்திருந்தது. வழக்கம் போல பார்சல் வாங்கத் தான் சில வாடிக்கையாளர்கள் வந்தனரே தவிர, அமர்ந்து சாப்பிட யாரும் விருப்பம் காட்டியதாக தெரியவில்லை. மேலும் கொரோனா அச்சமும் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.அத்துடன் பேருந்து போக்குவரத்தும் இல்லாததும், வெளியூர் மக்கள் அதிக அளவில் நகர்ர்ப்புறங்களுக்கு வராததும் மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் பல ஹோட்டல்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேல் ஹோட்டல் தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கடைகள் திறந்தும் வாடிக்கையாளர்கள் வராததால் மேலும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளதாக உரிமையாளர்கள் புலம்புகின்றனர். இதனால் ஹோட்டல்களை திறந்து நஷ்டத்தை சந்திப்பதை விட, கொரோனா நிலைமை சீராகும் வரை கடைகளை மூடிவிடுவதே மேல் என்ற நிலைக்கு பல பெரிய ஓட்டல் உரிமையாளர்கள் கருதுவதாகவும் கூறப்படுகிறது.






