இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் : ஒரே நாளில் 57,118 பேருக்கு தொற்று…! மொத்த எண்ணிக்கை 17 லட்சத்தை எட்டியது!!
இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சமாக 57,118 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பலியானோர் எண்ணிக்கையும் 764 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் தினமும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 50 ஆயிரத்தை கடந்து தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 57,118 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கி 16,95,988 ஆகவும் உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து 3-வது இடத்தில் இந்தியா நீடிக்கிறது.

மேலும் கொரோனாவால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 764 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 36,511 ஆக உயர்ந்து. உலக அளவில் அதிக கொரோனா உயிரிழப்பில் இத்தாலியை பின்தள்ளி இந்தியா 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் நீடிக்கின்றன.
இந்தியாவில், கொரோனா தொற்றில் இருந்து 10 97,374 பேர் குணம் அடைந்துள்ளனர். மேலும் இந்தியாவில் இதுவரை 1,93,58,659 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 5.25 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.






