புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் ரோடு ஷோ
தமிழக முதலமைச்சர் விஜய் திங்கள் கிழமை (நவம்பர் 2) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இந்த வருகையின் போது, ரூ.19 கோடி மதிப்பில் சத்தியமூர்த்தி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய உள் விளையாட்டு அரங்கத்தை அவர் திறந்து வைக்க உள்ளார். மேலும், அரசு விழாவில் பங்கேற்று பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
திங்கள் கிழமை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வரும் முதலமைச்சர், அங்கிருந்து ஹெலிகாப்டர் அல்லது சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நகரின் முக்கிய வீதிகள் வழியாக அவர் ரோடு ஷோ செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், முதல்-அமைச்சர் விஜய்யின் இந்தப் புதுக்கோட்டை வருகை அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் திங்கள் கிழமை முழுவதும் (நவம்பர் 2) ஒரு நாள் ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைக் கருத்தில் கொண்டு, விழா நடைபெறும் பகுதிகளைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகள் உள்பட மொத்தம் 13 மதுபானக் கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடங்கள் மற்றும் அவர் பயணிக்கும் வழித்தடங்கள் அனைத்திலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





