நாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்
நாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கொரோனா காரணமாக மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த பல முக்கிய மசூதிகள், பள்ளிவாசல்கள் இன்று சிறப்பு அனுமதி பெற்று திறக்கப்பட்ட நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் இன்று பக்ரீத் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதிகள், பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த இன்று சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் இன்று காலையிலேயே டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் பெருமளவுக்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த குவிந்தனர்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக மசூதிக்குள் நுழைவதற்கு முன்பாக அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
இதே போன்று நாடு முழுவதும் பல்வேறு நகரங்களிலும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். வழக்கமாக பக்ரீத் நாளில் தொழுகை முடித்து ஒருவருக்கு ஒருவர் ஆரத் தழுவியும், கை குலுக்கியும் வாழ்த்தையும், அன்பையும் பரிமாறிக் கொள்வது வழக்கம். ஆனால் இன்று தொழுகையில் ஈடுபட்ட அனைவரும் ஆரத் தழுவுவதை தவிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


https://play.google.com/store/apps/details?id=kuttram.kuttrame






