“கொரானா அச்சம் வேண்டாம்!” பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரானா அச்சம் காரணமாக சட்டப்பேரவையை முன் கூட்டியே ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மார்ச் 31-ந் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

 

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பேரவைக்கு வரும் எம்எல்ஏக்களுக்கு, தினமும் பரிசோதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரானா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத் தொடரை முன்கூட்டியே ஒத்தி வைக்குமாறு திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரானா குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். சட்டப்பேரவையில் அனைத்து விதமான தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய சோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். எனக்கும் சோதனை நடத்தப்படுகிறது. இதனால் அச்சப்படத் தேவையில்லை. சட்டப்பேரவையை முன்கூட்டியே ஒத்தி வைக்கவும் அவசியமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


Leave a Reply