பெரியார் அறிவுலகப் புத்தக சர்ச்சை
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக, ஆளும் த.வெ.க – எதிர்க்கட்சியான தி.முக. இடையே பரஸ்பர குற்றச்சாட்டுகளுடன் அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க சட்டப்பிரிவு இணைச்செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் பரந்தாமன், த.வெ.க அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டதை தொடர்ந்து, திமுக மீது பழிசுமத்துவதற்காகத் த.வெ.க தரப்பில் திட்டமிட்டு ஒரு தவறான பிம்பம் (Fake Narrative) கட்டமைக்கப்பட்டு வருவதாகப் பரந்தாமன் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் எத்தனையோ மக்கள் பிரச்னைகள் நிகழ்ந்தபோதெல்லாம் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய், இச்சம்பவத்திற்கு மட்டும் உடனடியாக அறிக்கை வெளியிடுவது முன்னரே திட்டமிடப்பட்ட ஒரு போலிப் பிரச்சார உத்தி (Fake Narrative Strategy) என்றார். மக்கள் அவரை இன்னும் ஒரு முழுமையான முதலமைச்சராகப் பார்க்காமல், சினிமா ஹீரோவாக மட்டுமே கொண்டாடுவதால், பிறர் எழுதித் தரும் வசனங்களை அவர் மேடைகளில் பேசி வருகிறார் என்று விமர்சித்தார்.
புத்தகக் கொள்முதலில் முறைகேடான நூல்கள் வந்துள்ளன என்ற தகவல் அரசுக்குத் தெரிந்தும், அவற்றை உடனடியாகத் திரும்பப் பெற முதலமைச்சர் ஏன் உத்தரவிடவில்லை? இந்த நூல்களை யார் கொள்முதல் செய்தார்கள், எவ்வளவு எண்ணிக்கையில் வாங்கப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ விவரங்களை ஆட்சியில் உள்ள த.வெ.க அரசு ஏன் இன்னும் பொதுவெளியில் வெளியிடவில்லை? எனக் கேள்வி எழுப்பினார். ஒரு முறைகேடு புகார் எழும்போது அரசுத் தரப்பிலிருந்தே முறையான விளக்கங்கள் வர வேண்டும்; ஆனால், விவரங்களைத் த.வெ.க தனது தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) மூலமாக வெளியிட்டு வருவது ஏன் என்றும் அவர் சாடினார்.
தி.மு.க ஆட்சிக் காலத்தில் முறையான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, உயர்மட்ட பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டன. தி.மு.க ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்த அவர், தற்போது சர்ச்சை எழுந்துள்ள புத்தகங்கள் ஜூன் மாதத்தில் வாங்கப்பட்டவை என்றார்.
சர்ச்சைக்குரிய அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பக நூல்களில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியிட்ட முத்திரை இடம்பெற்றுள்ளது குறித்துச் சுட்டிக்காட்டிய அவர், புத்தகங்களை அலமாரியில் (Rack) வைக்கும் தேதியைத்தான் சீல் வைத்தோம் என அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது; இதுகுறித்து அரசுத் தரப்பில் இருந்துதான் தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் ‘திரிஷா விஜய்’ என்ற எழுத்தாளரின் புத்தகங்களை வாங்க மாட்டார்கள்; குறிப்பாக திமுகவினர் நிச்சயம் வாங்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நூல்கள் விஜய்யின் பிறந்தநாள் தேதியிட்ட முத்திரையுடன் எவ்வாறு உள்ளே வந்தன என்பதை அரசு விளக்க வேண்டும் என்றார்.
அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையைக் கடுமையாகச் சாடிய பரந்தாமன், ரூ. 50 புத்தகத்தை ரூ. 90-க்கு வாங்கியிருந்தாலும் கூட தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால், ஆட்சியில் அமர்ந்திருக்கும் தற்போதைய அரசுக்கு ஒரு எழவும் தெரியவில்லை, ஆட்சி செய்யவும் தெரியவில்லை; திமுகவைக் குறை சொல்வதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாண்ட்-அப் காமெடியன் அமைச்சர் ராஜ்மோகனுக்குச் சவால் விடுக்கிறேன்; தைரியம் இருந்தால் அகல்விளக்கு பதிப்பகத்திற்கு எப்போது பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது, அரசாங்கக் கணக்கிலிருந்து எந்தத் தேதியில் பணம் மாற்றப்பட்டது என்ற விவரங்களை வெளியிடத் தயாரா? அகல்விளக்கு நிறுவனத்திற்கு எப்போது கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது, நூலகத்திற்குப் புத்தகங்கள் எப்போது கொண்டுவரப்பட்டன, திமுக ஆட்சியில் எந்தெந்தப் புத்தகங்களை வாங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது ஆகிய அனைத்து ஆவணங்களையும் மக்கள் மன்றத்தில் வெளியிட வேண்டும் என்றார்.
அகல்விளக்கு, பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்கள் பெயரிலும், சங்கீதா விஜய், விஜய் பாலு போன்ற புனைவுப் பெயர்களிலும் நூல்கள் வெளிவந்து உள்ளது குறித்துப் பேசிய அவர், அகல்விளக்கு பதிப்பகத்தில் மட்டும் 148 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஒரே ஆசிரியர் எழுதிய ஒரே தலைப்பிலான புத்தகம் 2 வெவ்வேறு பதிப்பகங்கள் மூலம் வெளியாகி இருக்கும் விநோதங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளன. பரிந்துரைக் குழு உறுப்பினருக்கே தெரியாமல் நடந்துள்ள இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படையான முழுமையான விசாரணையை நடத்த வேண்டும் என்றார்.
ஊருக்கு முன்பாக ‘திருடன் திருடன்’ என்று கூச்சலிட்டுக் கொண்டு டி.வி.ஏ.சி-க்குச் சென்று புகார் அளிக்கும் நாடகத்தை விடுத்து, நூலகத் துறை வசம் உள்ள அசல் கொள்முதல் ஆவணங்களை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், அதில் ஏதேனும் தவறுகள் நிரூபிக்கப்பட்டால் திமுக அதன் அனைத்துப் பின்விளைவுகளையும் சந்திக்கத் தயாராக உள்ளது என்றும் பரந்தாமன் உறுதிபடத் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





