இந்தியன்-2 விபத்து: விசாரணை என்ற பெயரில் போலீஸ் துன்புறுத்துகிறது..! நடிகர் கமல் வழக்கு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற விபத்து தொடர்பாக விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை துன்புறுத்துவதாக நடிகர் கமலஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நடிகர் கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் கிரேன் சரிந்து விழுந்ததில் 2 உதவி இயக்குனர்கள் உட்பட 3 பேர் பலியாகினர்.நடிகர் கமல், இயக்குனர் சங்கர் நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் மயிரிழையில் உயிர் தப்பினர்.

 

இந்த விபத்து தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். கமலஹாசனும் விசாரணைக்கு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

 

இந்நிலையில் விசாரணை என்ற பெயரில் போலீசார் தொடர்ந்து தம்மை துன்புறுத்துவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமலஹாசன் இன்று வழக்கு தொடர்ந்தார் .போலீசார் தொடர்ந்து தம்மை துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறும் கமல்ஹாசன் தரப்பில் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.