--- --:--:-- --

சென்னையில் 4 நாளுக்கு குடிநீர் விநியோகம் குறைப்பு

5

சென்னையில் ஐந்து மண்டலங்களில் வரும் நவம்பர் 11ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

 

சென்னையில் வீராணம் ஏரியில் இருந்து நகருக்குக் குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் மாற்றுப் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, ஐந்து மண்டலங்களில் நவம்பர் 11ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் குறைக்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயின் பாதையை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

இதன் காரணமாக, வடக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட உள்ளது. இதனால், நவம்பர் 11ஆம் தேதி காலை 6 மணி முதல் நவம்பர் 15ஆம் தேதி காலை 6 மணி வரை சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய ஐந்து மண்டலங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (CMWSSB) தெரிவித்துள்ளது.

 

 

 

தேனாம்பேட்டை மண்டலத்தில் நந்தனம், மயிலாப்பூர் மற்றும் 122 முதல் 126 வரையிலான வார்டுகளில் குடிநீர் விநியோகம் குறைக்கப்படும். கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்கள் முழுவதும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குடிநீர் விநியோகம் குறைக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

அவசரத் தேவைகளுக்காக, குடிநீர் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cmwssbtngov உள்ள ‘Dial for Water’ சேவையைப் பயன்படுத்தி லாரிகள் மூலம் குடிநீர் பெற முன்பதிவு செய்யலாம். அதேநேரத்தில், குழாய் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் குறைந்த அழுத்தத்தில் குடிநீர் விநியோகிக்கப்படும் பகுதிகளில் உள்ள பொது குடிநீர்க் குழாய்கள், சேமிப்புத் தொட்டிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வழக்கம்போல் தொடர்ந்து விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon