மாணவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்மோகன்
கடந்த தி.மு.க ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் பெரியார் அறிவுலகம் நூலக திட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து, இதற்கான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், த.வெ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பணிகள் நிறைவடைந்து சமீபத்தில் முதலமைச்சர் விஜய் நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட கொள்முதலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டினார்.
இது மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பியது. மேலும், பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு வாங்கிய புத்தகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைக்கேடு குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார். முன்னதாக, ஒரு பதிப்பகத்திடம் இருந்து மட்டும் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு வாங்கப்பட்ட புத்தகங்களின் தரம் குறித்து தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், இந்தியாவிலேயே முதல்முறையாக தி.மு.க ஏ.ஐ. ஊழல் செய்துள்ளது. பிப்ரவரி 14-ஆம் தேதி புத்தகம் கொள்முதலுக்கு ஆணை அளிக்கப்பட்டுள்ளது. 7 நாட்களில் விநியோகிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புத்தகம் நூலகத்தில் அடுக்கப்பட்ட தேதி தான் சீல் வைக்கப்பட்டது. போலி எழுத்தாளர்களின் பெயர்களில், ஏ.ஐ. மூலம் எழுதப்பட்ட புத்தகங்களை பல்வேறு நூலகங்களில் வாங்க கொள்முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது. யார் கொடுத்த அழுத்தத்தில் அதிகாரிகள் இந்த புத்தகத்தை எல்லாம் வாங்கினார்கள்.
திருச்சி காமராஜர் அறிவுலகத்திற்கும் ஏ.ஐ புத்தகங்களை வாங்க தி.மு.க ஆட்சியில் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களை வாங்கும் பரிந்துரையில் ஜெயரஞ்சன் கையெழுத்திட்டுள்ளார். அகல்விளக்கு பதிப்பகத்திற்கு கடந்த மார்ச் மாதமே கரூவூலத்தில் இருந்து பணம் அனுப்பப்பட்டுவிட்டது. அகல்விளக்கு பதிப்பகத்திடம் புத்தகங்களை ஒப்படைத்து பணத்தை திரும்ப பெறுவோம்.
புத்தகங்களுக்காக கமிஷன் பெற்றவர்களிடம் இருந்தும் பணத்தை திரும்ப பெறுவோம். தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற நூலக புத்தக ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்படும். அனைத்து நூலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு ஊழல் கண்டுபிடிக்கப்படும். நூலகங்களில் ஏ.ஐ. ஊழல் செய்த தி.மு.க-வினர் மாணவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.
தி.மு.க நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், மக்களும், மாணவர்களும் விட மாட்டார்கள். ஊழல் செய்த தி.மு.க-வினர் மீது காவல்துறை மூலமும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நூல் கொள்முதல் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மிகத் தீவிரமாக விசாரணை நடத்த உள்ளது. போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதின் பிண்ணனியில் யார் உள்ளார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





