இத்தாலியில் சிக்கித் தவித்த 218 இந்தியர்களுடன் டெல்லி வந்தது சிறப்பு விமானம்..! ஈரானில் இருந்தும் 240 பேர் நாடு திரும்பினர்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரானா அச்சுறுத்தலா. இத்தாலியின் மிலன் நகரில் பரிதவித்த 211 மாணவர்கள் உள்ளிட்ட 218 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.ஈரானில் சிக்கித் தவித்த 240 இந்தியர்களும் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் 14 நாட்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

கொரானா வைரஸ் ஆட்கொல்லி வைரசுக்கு உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் சீனாவை அடுத்து அதிக உயிர்ப்பலி ஏற்பட்டது இத்தாலி நாட்டில் தான்.இத்தாலியில் இதுவரை 1441 பேர் உயிரிழ்ந்துள்ளனர். கொரானா தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

இதனால் இத்தாலியில் கடும் பீதி நிலவுகிறது. கொரானா தடுப்பு நடவடிக்கைகளை இத்தாலி அதிதீவிரமாக மேற்கொண்டுள்ளது. வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்தும் அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இத்தாலியில் உள்ள இந்தியர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.

 

இதில் இத்தாலியின் மிலன் நகரில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல், உதவி செய்யுமாறு இந்திய அரசுக்கு அபயக்குரல் கொடுத்தனர். இவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக உணவு, தண்ணீர் இன்றி அறைகளில் சிக்கித் தவிப்பதாக வெளியான தகவலை அடுத்து வெளியுறவு அமைச்சகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவர்களை மீட்டு வர டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் நேற்று புறப்பட்டது.

 

மிலன் நகரில் சிக்கித் தவித்த 211 மாணவர்கள் உள்ளிட்ட 218 இந்தியர்கள் மீட்கப்பட்டு இன்று காலை சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். இதேபோல், கொரானா வால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு நாடான ஈரானில் சிக்கித் தவித்த இந்திய தொழிலாளர்கள் 240 பேரும் விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

 

இத்தாலியிலிருந்து அழைத்து வரப்பட்ட 211 மாணவர்களில் 55 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈரான், இத்தாலியில் இருந்து மீட்டுவரப்பட்ட அனைவரும் 14 நாட்களுக்கு தனிமை படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.