திருப்பூரில் வழக்கறிஞர் ஆபீஸிலேயே கைவரிசை! சொத்து தகராறில் ஆலோசனை கேட்க வந்து ரூ.9,000 சுருட்டல் – அம்பலமான CCTV வீடியோ!
திருப்பூர் ஆகஸ்ட் 29,
திருப்பூர் நீதிமன்ற வழக்கறிஞரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கணபதிபாளையம் நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் வைத்தியநாதன் (32). வழக்கறிஞரான இவர், திருப்பூர் LPG மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள அருண் காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் இவரது அலுவலகம் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருப்பூர் குமாரனந்தபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், தனது சொத்து பிரச்சினை குறித்து சட்ட ஆலோசனை பெறுவதற்காக வழக்கறிஞர் சங்கர் வைத்தியநாதனை அணுகியுள்ளார். வழக்கறிஞரும் அவருக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

கடந்த 28.08.2026 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் வழக்கறிஞர் சங்கர் வைத்தியநாதன் தனது காரை சர்வீஸிற்காக குங்குமபாளையத்திலுள்ள டொயோட்டா (Toyota) ஷோரூமிற்கு எடுத்துச் சென்றுள்ளார். கிளம்பும்போது அவசரத்தினாலோ, கவனக்குறைவாலோ தனது மணிபர்ஸை அலுவலகத்திற்கு வெளியே போடப்பட்டிருந்த மேஜையிலேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் அலுவலகத்தில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, மீண்டும் ஆலோசனைக் கேட்க வந்த பாண்டியன், அங்கிருந்த மணிபர்ஸை எடுத்து அதிலிருந்த ரூ.9,000 ரொக்கப் பணத்தைத் திருடிக்கொண்டு, காலியான மணிபர்ஸை மேஜையிலேயே போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
இதனிடையில் ஷோரூமிலிருந்து திரும்பிய பிறகுதான் பணப்பை திறக்கப்பட்டு பணம் காணாமல் போயிருப்பது தெரிந்தது. உடனே அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது, பாண்டியன் மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் வந்ததும், பாண்டியன் பணத்தைத் திருடியதும் தெளிவாகப் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து CCTV ஆதாரங்களுடன் பாண்டியனிடம் கேட்டபோது, அவர் எவ்வித பதிலும் அளிக்காமல் மழுப்பலாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சங்கர் வைத்தியநாதன், வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது பணத்தைத் திருடிச் சென்ற பாண்டியன் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து, திருடப்பட்ட ரூ.9,000 தொகையை மீட்டுத் தருமாறு அவர் அளித்த புகாரின் பேரில், வீரபாண்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




