168 நாட்களுக்கு பின் மேட்டூர் அணை மூடல்..! தட்டுப்பாடின்றி நீர் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்!

டெல்டா பகுதி பாசனத்திற்காக கடந்த 168 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த மேட்டூர் அணை இன்று மாலை மூடப்படுகிறது.கடந்த ஆண்டுகளில் பாசனத்திற்கு போதிய நீர் கிடைக்காமல் அல்லாடிய விவசாயிகள், இந்த ஆண்டு தட்டுப்பாடின்றி நீர் கிடைத்த மகிழ்ச்சியில் நெல் அறுவடையில் மும்முரமாகியுள்ளனர்.

 

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் மூலம் கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை ,புதுக்கோட்டை, நாகை,திருவாரூர், கடலூர் என 12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. வழக்கமாக சம்பா, குறுவை, தாளடி என முப்போகம் விளையும் டெல்டாவில் ஒரு போக விளைச்சலுக்கே விவசாயிகள் பாடு திண்டாட்டம் ஆகிவிடுகிறது.

 

வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே நீர்திறப்பு தாமதமாகி விடுகிறது. கடந்த ஆண்டு கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் மேட்டூர் அணை ஆகஸ்ட் 13-ல் திறக்கப்பட்டது. காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்தால் இந்த சீசனில் நான்கு முறை மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது.

 

வடகிழக்கு பருவமழையும் கை கொடுத்ததால் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்டினர்.நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் பாசனத்திற்கான நீர் தேவை குறைந்து விட்டது.இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மேட்டூர் அணை மூடப்படும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 168 நாட்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 153 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையின் நீர்மட்டம் 107.50 அடியாகவும் , நீர் இருப்பு 75 டிஎம்சியாகவும் உள்ளது. கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டு பாசனத்திற்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைத்ததால் டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Reply