ராமநாதபுரத்தில் நடைபெற்ற 71-வது குடியரசு தின விழாவில், தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கம் பெற்ற காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
குடியரசு தின விழாவின் போது, மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இது போல் காவல்துறையில், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம் வழங்கப்படுவது வழக்கம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜாதி மோதல் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டது, கள்ளச்சாராய ஒழிப்பு, குற்றச்சம்பவங்கள் நடைபெறாது சிறப்பு கண்காணிப்பு, சட்டம் ஒழுங்கில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் 60-க்கும் மேற்பட்டோர் இந்த காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், முதலமைச்சர் காவலர் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
குடியரசு தின விழாவில் காவலர் பதக்கம் பெற்ற காவலர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி.வருண்குமார் வாழ்த்துக்களை தெரிவித்தார்.